அம்மாவின் தேவைகள்

அம்மா திரும்பத் திரும்ப பலதடவைகள் தொலைபேசியில் என்னை அழைத்து விட்டா. ஒவ்வொரு முறை கதைக்கும் போதும் பத்துத் தடவைகளுக்கு மேலாக 'எப்பவடா வருவாய்?' என்று கேட்டு விட்டா.

போனமாசம்தான் போயிட்டு வந்தனான். எப்போதும் இப்படித்தான். ஒன்றரை மணித்தியால ஓட்டம். போய் சில மணிநேரங்கள் நின்று வருவேன். திரும்பிய அடுத்த நாளே தொலைபேசி கிணுகிணுக்கும். 'எப்பவடா வருவாய்?' என்றுதான் கதைகக்கத் தொடங்குவா.

உணவக வேலை. கிழமையில் ஒரு நாள்தான் விடுப்பு. அந்த ஒரு நாளும் அம்மாவிடம் வெளிக்கிட்டால் வீட்டில் பிரச்சனை. மனுசி மூஞ்சையைத் தூக்கி வைச்சுக் கொண்டிருப்பாள்.

போகப்போறேன் என்றதும், அவள் செய்கைகள் எல்லாம் மாறிவிடும். தேத்தண்ணியை மேசையில் `டொங்´ என்று வைப்பாள். கதவைச் சாத்தும் போது ஒரு வித வேகத்துடன் சாத்தி பெருமொலி எழுப்புவாள். குசினிக்குள் பாத்திரங்களை உடைக்காத குறையாய் உருட்டுவாள்.

„உனக்கென்ன, உன்ரை அம்மாவை யேர்மனியிலை கூட்டிக் கொண்டு வந்து வைச்சுக் கொண்டாடிக் கொண்டிரு“ என்பாள். பார்வையால் எரிச்சலைத் தெளிப்பாள்.

அவளது அம்மா ஊரில். லெபரா கார்ட்டை வேண்டி வேண்டி கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கதைப்பாள்.

எனது அம்மாவை நேரே கண்டால் „மாமி, மாமி“ என்று குழைவாள். சிரித்துச் சிரித்துக் கதைப்பாள். அன்போடு வினவுவாள். அக்கறையாகக் கவனிப்பாள். எனது அக்கறை அம்மாமீது என்றால்தான் அவளுக்குப் பிடிக்காது. வெடிப்பாள்.

அம்மா தங்கைச்சியோடுதான் இருந்தவ. தங்கைச்சி வீடு கொஞ்சம் கிட்டத்தான். அங்கென்றால் அடிக்கடி போகக் கூடியதாக இருந்தது. தங்கைச்சி திடீரென்று ஆறு மாத விடுப்பு எடுத்துக் கொண்டு, மகளுக்கு ஏதோ படிப்பு என்று இந்தியாவுக்குப் போய் விட்டாள். அம்மாவைக் கொண்டு போய் தன்ரை மகன் வீட்டிலை விட்டிட்டாள். „லிப்ற் இல்லாத எனது வீட்டில் அம்மாவால் படி ஏற ஏலாது“ என்று அவளே எல்லாம் தீர்மானித்தும் விட்டாள்.

அம்மா தள்ளி இருக்கும் போதே இப்படி வெடிக்கும் எனது மனைவி, வீட்டுக்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டால் என்ன சந்நதம் ஆடுவாளோ என்ற பயத்தில் நானும் ஒன்றும் வற்றுபுறுத்தவில்லை. அது ஒரு குற்றமாய் இப்போதும் எனக்குள் குறுகுறுத்துக் கொண்டேயிருக்கிறது.

தங்கைச்சியின் மகன் வீடு வசதியானதுதான். மருமகளும் நன்றாகக் கவனிப்பாள். எனக்குத்தான் தூரமாப் போய் விட்டது.

இருந்தாலும் என்ன செய்வது? ஒருவாறு புறப்பட்டாயிற்று. அதிவேக வீதி. ஒருவித ஒழுங்குடன் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. காருக்குள் தமிழ்ப்பாட்டு. மனதுக்குள் என்னைக் கண்டதும் மகிழப்போகும் அம்மாவின் முகம். அதற்கு மேலால் எனது மனைவியின் செய்கைகளால் கவிந்து போன ஒரு துயர்.

எல்லோரையும் ஒரே பொழுதில் திருப்திப்படுத்தி விட முடிவதில்லைத்தானே.

மனம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாடல்களுடன் லயிக்கத் தொடங்கி, சோகமும், மகிழ்வும் என்று மாறி மாறிக் கனிந்தும், கசிந்தும் வேறொரு ஏகாந்தத்தில் பயணித்தது.

அம்மா என் வரவை எதிர்ப்பார்த்திருந்ததில் சாப்பிடாமல் காத்திருந்தா. என்னைக் கண்டதும் எத்தனையோ வருடங்களின் பின் காண்பது போல குழந்தைத்தனமாகக் குதூகலித்தா.

ஒரு பொழுதில் ஓடி ஓடி வீட்டில் உள்ள அத்தனை சுமைகளையும் சுமந்த அம்மா தன்னையே சுமக்க முடியாமல் தள்ளாடினா. சோபாவில் இருந்து கையை ஊன்றி எழும்பும் போது தடுமாறி மீண்டும் தொப்பென சோபாவில் விழுந்தா. மீண்டும் பிரயத்தனப்பட்டு எழும்பினா. நான் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையடியில் உட்கார வைத்தேன்.

மருமகள் சுவையாகச் சமைத்திருந்தாள். முருங்கைக்காய்ப் பிரட்டல். கத்தரிக்காய் பொரித்துச் சம்பல். வெட்டிக்காய் வதக்கல் குழம்பு. அம்மாவுக்கு மச்சத்தை விடச் சைவம் பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துச் சமைத்திருந்தாள். நானும் சாப்பிட்டேன்.

ஆனாலும் ஏதோ ஒன்று என்னை அங்கு அந்நியப் பட்டவன் போலவே உணர்த்திக் கொண்டிருந்தது. என் அம்மா எனக்குச் சொந்தமில்லாதவள் போலவும் அவளுக்குத்தான் சொந்தமானவள் போலவும் இருந்தது மருமகளின் செய்கை.

அம்மா தட்டுத்தடுமாறி எழுந்து, கைகழுவ குசினியை நோக்கி நடந்த போது, கால் தடுக்கி விடுவாள் போலிருந்ததால், நான் பயந்து „கால் தடுக்கி விடுவாய்“ என்றேன்.

மருமகள் உடனே „நான்தானே அவவை ஒவ்வொரு நாளும் பார்க்கிறன்“ என வெடுக்கெனச் சொன்னாள்.

„நான்தானே உன் அம்மாவைப் பராமரிக்கிறேன். நீயென்ன, இப்போ வந்து விட்டு கவனம் பார்க்கிறாய். பேசாமல் இரு“ என்பது போலிருந்தது அவளது பேச்சு.

அவளது பார்வைகளிலும், செயல்களிலும் அலட்சியம் பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது. நான் அந்நியப்பட்டவன் போல உணர்ந்தேன். அவளது திமிர் என்னை „போய்விடு“ என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

அம்மாவுக்கு அவள் எல்லாப் பணிவிடைகளையும் செய்து கொண்டிருந்தாள். அம்மாவும் அவளது பணிவிடைகள் பற்றி மீண்டும் மீண்டுமாய் புகழந்து சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

இனி நான் அங்கு போக வேண்டிய அவசியம் இல்லையென நினைத்துக் கொண்டேன். புறப்படும் போது „அம்மா, நான் இனி இப்போதைக்கு இங்கை வரமாட்டன்“ என்றேன்.

அம்மா, சுளீரென்று யாரோ தன்னைச் சாட்டையால் அடித்தது போலத் துடித்துத் திடுக்கிட்டாள்.

வழி நெடுகிலும் அந்தத் திடுக்கிடல் என்னை வருத்தியது. யார் என்னை அலட்சியப் படுத்தினால் என்ன? அம்மாவுக்கு என் வரவு பிடிக்கிறது. தேவைப்படுகிறது. நாளைக்கே போன் பண்ணி "எப்பவடா வருவாய்?" என்று கேட்பா.

- சந்திரவதனா
24.09.2018

Related Articles

Yaar Manathil Yaar... Chandravathanaa

`மே´ மாதம்

Manaosai - Shortstory - Chandravathanaa

நானும் காத்திருக்கிறேன்

ஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்)