உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி

1974இல் பத்திரிகை உலகை நிமிர்ந்து பார்க்க வைத்ததுதான் „வோட்டர் கேற்' விவகாரம். இளம் பத்திரிகை நிபுணர்கள் இருவரால் வெளிக் கொணரப்பட்ட இந்த விடயம் அப்பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த றிச்சார்ட் நிக்சனின் அரசியல் ஓட்டத்தையே நிலைகுலைய வைத்து முற்றாகவே நிறுத்தி விட்டிருந்தது.

அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்களின் செயற்பாடுகள் மக்கள் நலன்களிலே சார்ந்து இருக்க வேண்டுமே தவிர அரசியலை தங்கள் சுயநலத்துக்குப் பயன் படுத்துவதில் இருக்கக் கூடாது. நாடும், மக்கள் நலமுமே ஒரு புனிதமான அரசியல் செயற்பாடாகும்.

யேர்மனியில் முன்னாள் ஜனாதிபதியான கிறிஸ்ரியான் வூல்ப் (Christian Wulff) தனது பதவியை 2012இல் இராஜினாமா செய்து கொண்டார். 2010 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோக்கிம் கவுக் (Joachim Gauck) என்பவர் இவரது முக்கியமான போட்டியாளாராக இருந்தார். அந்த ஜனாதிபதித் தேர்தலில் நடந்த முதல் இரண்டு வாக்கெடுப்புகளிலும் இருவருமே பெரும்பான்மை வாக்குகள் பெறாததால் வாக்குப் பதிவு மூன்றாவது முறையாக நடந்தது. மூன்றாவது வாக்கெடுப்பில் ஜோக்கிம் கவுக் தோற்றுப் போக கிறிஸ்ரியான் வூல்ப் ஜனாதிபதியானார். முதல் இளம் ஜனாதிபதி என்ற பெருமையோடு தனது ஐம்பத்தியோராவது வயதில் கிறிஸ்ரியான் வூல்ப் 30.06.2010இல் யேர்மனியின் பத்தாவது ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

மூன்று தரம் நடந்த வாக்கெடுப்பில் இறுதியாக தேர்தலில் வெற்றி அடைந்திருந்தாலும் கிறிஸ்ரியான் வூல்ப்பால் இரண்டு வருடங்கள் தான் ஜனாதிபதியாக இருக்க முடிந்தது. 17.02.2012இல் இவர் தனது பதவியை தானாகவே இராஜினாமா செய்து கொண்டார். இவர் தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டதற்கு பின்னணியில் பத்திரிகை ஒன்றில் வந்த புலானாய்வுச் செய்தியே காரணமாயிற்று.

ஜனாதிபதி ஆவதற்கு முன்னர், 2003 இல் இருந்து 2010 வரை கிறிஸ்ரியான் வூல்ப் நீடர்சாக்சன் (Niedersachsen) என்ற மாநிலத்தின் முதலமைச்சராக இருந்திருக்கின்றார். 2007இல் திரைப்படத் தயாரிப்பாளரான டேவிட் குரோனன்வோல்ட் (David Gronenwold) அவர்களின் செலவில் ஒரு வாரவிடுமுறையை ஹொட்டல் ஒன்றில் கழித்திருந்தார். அத்துடன் 2009இல் விடுமுறையைக் கழிக்க எயர் பேர்லின் (Air Berlin) விமான சேவையின் செலவில் விமானத்தில் பறந்திருக்கின்றார். மேற்சொன்ன இரண்டு காரணங்களைத்தான் மோப்பம் பிடித்து பத்திரிகை ஒன்று தனது முதற் பக்க செய்தியாக வெளியிட்டது. விளைவு, இந்த இரண்டு விவகாரத்தையும் ஊடகங்கள் விவாதிக்க ஆரம்பித்தன. யேர்மனிய அரச அமைச்சு சட்டத்தின் பிரகாரம் பதவியில் இருப்பவர் 10 யூரோக்களுக்கு மேல் அன்பளிப்பு பெற முடியாது. அப்படி ஒரு சட்டம் இருக்கையில் எப்படி ஒரு மாநில முதலமைச்சர் இலவசமாக விமானப் பயணத்தையும், விடுதியில் தங்குவதையும் மேற்கொள்ள முடியும் என்ற கேள்விகள் பாராளுமன்றத்திலும் வந்து சேர்ந்தன. சட்டங்கள் ஒரு புறம் இருக்கட்டும். விவாதங்களும் இத்தோடு நின்று போகட்டும் என்று கிறிஸ்ரியான் வூல்ப் தனது உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டார். கிறிஸ்ரியான் வூல்ப் பதவி விலக ஜனாதிபதித் தேர்தலில் இவருடன் போட்டியிட்ட ஜோக்கிம் கவுக் தனது 72வது வயதில் 18.03.2012இல் பதினோராவது யேர்மனிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் 1991இல் இருந்து 1996 வரையான கால கட்டத்தில் தனது வருமானத்துக்கு மேலான சொத்துக்கள் சேர்த்திருக்கின்றார் என ஒரு வழக்கு 1996 இல் இருந்து இன்றுவரை அதாவது 19 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஆறு வருடங்கள் போனால் அதற்கும் ஒரு விழா எடுக்க வாய்ப்பிருக்கிறது. 250க்கு மேலான சாட்சிகள், பல நீதிபதிகள், இரண்டு மாநில நீதிமன்ற விசாரணைகள் என ஒரு முதலமைச்சர் சொத்து சேர்த்தாரா இல்லையா என வழக்கு தன்பாட்டுக்கு அரச நிதியில் நடந்து கொண்டிருக்கிறது. இடையில் முதலமைச்சர் குற்றவாளிதான் என 2014இல் நாலு வருட ஜெயில், 100கோடி அபராதம் எனத் தீர்ப்பு வந்தது. ஆனால் முதலமைச்சர் செய்த மேல்முறையீட்டில், „அரசு தரப்பு குற்றங்களை நிரூபிக்கவில்லை' என 2015இல் விடுதலை கிடைத்து விடுகிறது. வழக்கு இப்பொழுது மீண்டும் முருங்கை ஏறி இருக்கிறது.

தண்டணை அளிக்கப் பட்டதால் முதலமைச்சர் பதவி போய் பின்னர் தீர்ப்பு சாதகமாக மாறியதால் திரும்பவும் முதலமைச்சராகி இன்றும் அவரது ஆட்சி நடக்கிறது. இதை எல்லாம் பார்க்கும் பொழுது தமிழ்நாட்டு பத்திரிகைத் துறையின் வலிமை என்ன என்பது புரிகிறது. ஆட்சியில் உள்ளவர்களை எதிர்ப்பதிலும், உண்மைகளை வெளியே கொண்டுவருவதிலும் பத்திரிகைகள் தயக்கம் காட்டுகின்றன. அல்லது பயப்படுகின்றன.

„விளக்கு அணைஞ்சு போட்டுது வீட்டிலை
விளங்குமா இந்தப் பொம்பளை?' என்று பாடிய கலைஞர் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டதை இதற்கு ஒரு சாட்சியாக்கலாம்.

சென்னை எந்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு வந்த இசைஞானி இளையராஜாவிடம், சமீபத்தில் வெளிவந்த „பீப்' பாடல் பற்றி ஒரு நிருபர் கேட்டு கடுப்பேத்தியதைப் பார்த்தோம். ஒருவாரம் கழித்து தனது கட்சித் தொண்டர்களின் இரத்ததான நிகழ்ச்சியைப் பார்வையிட வந்த தேமுதிக கட்சியின் தலைவரைக் கடுப்பேத்த அவர் „தூ' என்று பழிக்க அதை ஒட்டு மொத்த பத்திரிகையார்களையும் கேவலப் படுத்துகிறது என பெரிது படுத்தியதையும் பார்த்தோம். ஒரு நிகழ்ச்சியைப் பற்றி தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஒரு நிருபர் அதைப் பற்றிய விபரங்களைத் திரட்டாமல் தேவை இல்லாத கேள்விகளை கேட்பது நாகரிகமாகாது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது, இசைஞானி இளையராஜா சொன்னது போல் „உனக்கு அறிவிருக்கா?' என்பதும், விஜய்காந்தின் அந்த ஆவேசமும் எனக்கு சரியாகவே படுகிறது. தான் குற்றவாளியா? இந்தப் பதவி தனக்கு தகுதியானதா? என்பதை எல்லாம் நேரம் இருந்தால் மக்களுக்கான அந்த முதலமைச்சர் தனியாக இருந்து சிந்தித்துப் பார்க்கட்டும். அதே நேரம் மக்களுக்குச் சேவை செய்யும் பத்திரிகையாளர்கள் அதுவும் தங்களுக்கு அறிவிருக்கு என்று சொல்லிக் கொள்பவர்கள், நீ „தூ' என்றால் உன் படத்தை தெருவில் வைத்து நாங்கள் துப்புவோம் என்று செய்து காட்டி பெருமை பேசுபவர்கள் இப்பொழுது தங்களைத் தாங்களே சுய விமர்சனம் எழுதிக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியை யார் திறந்து விட்டார்கள்? மழை நீரினால் வந்த அவலம் எத்தகையது? நிவாரணம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எல்லோருக்கும் போய் சேர்கிறதா? நிவாரணப் பணிகளில் தில்லு முல்லு நடக்கின்றனவா? மழை நீர் வடிந்தாலும் நோய்கள் பரவ வாய்ப்பிருக்கா? என்று ஏகப்பட்ட விடயங்கள், வெள்ளம் அடித்து வந்த குப்பைகளுக்கும் மேலாகக் குவிந்து கிடக்கிறன. ஆனால் நிருபர்களோ நடிகர் சங்கத் தேர்தலில் விசால் அணி வெற்றி, சினேகாவிற்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கிறது, நயன்தாரா நகைக்கடை திறந்து வைக்கிறார் என்று தங்கள் சேவையை மிகமிகப் புனிதமான பாதையில் சென்று செய்து கொண்டிருக்கின்றார்கள்.

யாராவது இவர்களுக்கு புரட்சித் தலைவரும், அம்மாவும் இணைந்து நடித்த சந்திரோதயம் திரைப்படத்தை போட்டுக் காட்டினால் நல்லா இருக்கும்.

- மூனா
01.01.2016

Related Articles