இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்

நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது படிப்புத்தான் எங்களது மூலதனம் என்று எங்கள் பெற்றோர்களால் சொல்லி வளர்க்கப் பட்டதால் விளையாட்டுக்களில் கலைகளில் எங்களால் அதிகளவு கவனம் செலுத்த முடியவில்லை. என்னென்ன திறமைகள் எங்களிடம் இருந்தன என்பதை நாம் கண்டறிந்து வெளியே காட்டிக்கொள்ள அன்று எமது நாட்டிலும் எள்ளவும் வாய்ப்பு இருக்கவில்லை. ஒரு விதத்தில் பார்த்தால், விளையாட்டுத்துறையை பற்றி பெரிதாக யாருமே கண்டு கொள்ளவில்லை எனலாம். படித்துக் கொண்டே விளையாடும் உத்தி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சத்தமாகவே சொல்லிக் கொள்ளாம்.

எங்களது துடுப்பாட்டங்கள், உதைபந்தாட்டங்கள், கைப்பந்தாட்டங்கள் எல்லாமே பாடசாலையை விட்டு நாங்கள் வெளியே வந்த பொழுது எங்களை விட்டு வெளியேறி விட்டன.

இந்த நிலை இருந்தும் கூட, ஐம்பதுகளில் இளவாளையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றியிருக்கின்றான். 1952இலும் 1956இலும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்காக உயரம் பாய்தல் போட்டியில் பங்கு பற்றிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்தான் அந்த இளைஞன். ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமன்றி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் 1958இல் நடந்த ஆசிய விளையாட்டில் உயரம் பாய்தலில் 2.03 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கம் வாங்கி வந்திருக்கின்றார்.

புலம்பெயர்ந்து வந்ததன் பின்னர் எங்கள் அணுகுமுறைகளில் சற்று மாறுதல் தெரிகிறது. விளையாட்டுத்துறையில் ஈடுபட எங்கள் பிள்ளைகளுக்கு புலம் பெயர் வாழ்வில் அதிக வாய்ப்புகள் இருப்பதால் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளைகள் வழிக்கு பெற்றோர்கள் போக வேண்டிய நிலைதான் இன்று காணப்படுகிறது. எஞ்சினியர், டொக்டர் தகமைகளை விரும்பிய எங்களது பெற்றோர்களின் கனவு மேகங்கள் கலையைத் தொடங்கி விட்டன. இப்பொழுது பிள்ளைகளின் திறமைகள் மெதுவாக வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. இதில் கலைகள் ஊடாக மட்டுமன்றி விளையாட்டுத்துறை ஊடாகவும் அடுத்த சந்ததியினர் தங்களை வெளி உலகுக்கு காண்பிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

விளையாட்டுக்களில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம் போன்றவைகளே முக்கியமான விளையாட்டுக்களாக எங்களவர்களால் கவனிக்கப்படுகின்றன. மல்யுத்தம் குத்துச்சண்டை எல்லாம் பின் வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டன. ஆனால் ஒரு காலத்தில் மல்யுத்தமும் குத்துச்சண்டையும் தமிழர்களது வீர விளையாட்டுக்களாக முன்வரிசையில் இருந்திருக்கின்றன.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சோழன் கரிகாற்பெருவளத்தானைப் பார்த்து பட்டினத்துப்பாமாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இப்படிச் சொல்கிறார்,

"....கருந் தொழில், கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும்
புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி,
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்

(போர்ரவீர்களின்ன உறவினர்கள் தங்களுக்குள்ளே மோதி ஆரவாரத்துடன் போர்ப்பயிற்சி செய்து கொண்டனர்.
கடலில் பிடித்த இறால்களைச் சுட்டு சாப்பிட்டனர். வயலில் பிடித்த ஆமையின் இறைச்சியை சமைத்து உண்டனர்.
தங்களை அடையாளப்படுத்துவதற்காக ஒருவர் மணல் மேட்டில் பூக்கும் அடும்பு மலரைத் தலையில் அணிந்திருந்தார். மற்றொருவர் நீரில் பூக்கும் ஆம்பல் மலரை மாலையாக்கி போட்டுக் கொண்டிருந்தார்.
போட்டியின் நடுவர் சூரியன் போல் நடுவில் இருந்தார். சூரியனைச் சுற்றிக் கோள்கள் சுழல்வது போல் நடுவரைச் சுற்றி போர்ப்பயிற்சிகள் நடந்தன.
இளைஞர்களின் மன்றத்தில் மற்போர், குத்துச் சண்டை போன்ற சண்டைப் பயிற்சிகளில் கையால் மோதிக்கொண்டனர்.
தங்கள் தங்கள் உடல் பலத்தைக் காட்டுவதற்றகாக அவர்கள் சினங்கொண்டு பின்வாங்காமல் தாக்கிக் கொண்டார்கள்)

அன்றைய தமிழ் மறவர்களின் வீர விளையாட்டை இன்றொரு தமிழன் எடுத்துக் கொண்டான். உலகளவில் தன்னைக்காட்டிக்கொள்ள அவன் ஒரு குத்துச்சண்டை வீரனாக உருவாகி இருக்கின்றான். யேர்மனியில் வசித்து வரும் துளசி தர்மலிங்கம் என்ற இளைஞனே அந்த வீரன்.

தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தருமலிங்கம் இன்று கட்டார் நாட்டுக்காக விளையாடுகிறார். இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) தர்மலிங்கம் கடந்த ஆண்டுவரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை யேர்மனி நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.

யூலை 7ந் திகதி அன்று நடந்த Light Welterweight மூன்று சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino வீரனை 3-0 என்ற புள்ளியில் வென்று ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தெரிவாகி இருக்கின்றார்.

யூலை 7ந் திகதி அன்று நடந்த துளசி தருமலிங்கத்தின் குத்துச்சண்டையை இந்த இணைப்பில் பாரக்கலாம்.

https://m.youtube.com/watch?v=5AEgIUOijwE

இதுவரை தன்னுடன் போட்டியிட்ட தென் ஆப்ரிக்கா, சீனா, உக்ரெயின், போலந்து , சுவிற்சலாந்து, பொஸ்வானா நாட்டு குத்துச்சண்டை வீரர்களை வென்ற துளசி தருமலிங்கம், 2016 ஓகஸ்டில் நடைபெறும் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் அனைத்து நாட்டு வீரர்களையும் வென்று பதக்கம் பெற்று வர நாங்களும் வாழ்த்துவோம் .

- மூனா
22.07.2016

Related Articles