எப்போதான் சொல்லுவீங்க..?

தொண்ணூறுகளின் ஆரம்பம். தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை யேர்மனியில் ஆரம்பித்து இருந்தோம். கைகளில் அடக்கமான தொலைபேசிகளோ அல்லது மடிக் கணணிகளோ இல்லாத நேரம். ஆகவே ஓடியோடித்தான் எங்கள் சேவையைச் செய்து கொண்டிருந்தோம். வீடு, குடும்பம், வேலை என்று எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மல்லுக் கட்டிக் கொண்டுதான் எங்களுடைய புனர் வாழ்வுக்கான சேவை இருந்தது.

மக்களை நாங்கள் அணுகும் முறையை விரும்பிய பலர், தாயகத்துக்கு சேவை செய்வதில் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். யேர்மனியில் இருந்த தமிழ் மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை மனம் விரும்பி வழங்கினார்கள். இவை எல்லாம் எங்களுக்கு வலிமையான ஊக்க மருந்துகளாகின. அடுத்த கட்டமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை சட்டரீதியாக யேர்மனியில் பதிவது என்று முடிவெடுத்தோம். அப்பொழுதுதான் சிக்கலே உருவானது.

சட்டப்படி ஒரு அரசசார்பற்ற நிறுவனமாக தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளையைப் பதிவது என்றால் அது தங்களை மீறிப் போய் விடும் என்ற அச்சத்தை யாரோ ஒரு அறிவாளி கிள்ளிப் போட அது யேர்மனியில் இருந்த தமிழர் இயக்கத்துக்குள் பெரும் புகையைக் கிளப்பி விட்டது. அதுவே நீயா நானா என போட்டியாகிப் போனது.

ஒட்டு மொத்தமாக புனர்வாழ்வுக் கழக நிர்வாகத்தையே கலைத்து விட்டு புதியவர்களைப் போட வேண்டும் என அவர்கள் தீர்மானித்து விட்டார்கள். அதற்காக அவர்கள் அன்றைய சர்வதேச பொறுப்பாளர் லோரன்ஸ் திலகரை நாடினார்கள்.

லோரன்ஸ் திலகரிடம் எல்லோருக்கும் நல்ல மதிப்பு இருந்தது. நிலைமையை அவர் எல்லோருடனும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவைத் தருவார் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. கும்மர்ஸ்பார்க் என்ற இடத்திற்கே அவர் வருவதாக ஏற்பாடு. அது எனது இடத்தில் இருந்து ஏறக்குறைய 450 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. என்னிடம் வாகன வசதி இருக்கவில்லை. என்னை கும்மர்ஸ்பார்க்கிற்கு அழைத்துச் செல்ல வாகனம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. ஆனால் வேலைத் தளத்தில் விடுமுறை தர மறுத்து விட்டார்கள். போக முடியாத நிலையில் நான் இருந்தேன். மருத்துவ விடுப்பு எடுக்கலாம் என்றால் அது வேலைக்கும், உடலுக்கும் ஆரோக்கியமாகப் படவில்லை. மருத்துவ விடுப்பு என்றவுடன் என் நினைவுக்கு வருவது இதுதான். ஒரு முறை எனது நகரில் „இரங்கும் இன்னிசை இரவு' என்ற ஒரு கலை நிகழ்ச்சியை புனர்வாழ்வுக் கழகத்திற்காக ஏற்பாடு செய்திருந்தேன். பொறுப்பாளருக்கு வேலைத்தளத்தில் விடுப்பு கிடைக்கவில்லை. மருத்துவரிடம் போய் ஏதாவது காரணம் சொல்லி மருத்துவ விடுப்பு எடுக்கலாம் என்று யாரோ அவரிடம் அறிவுரை கூற அவரும் மருத்துவரிடம் போய் முதுகு நோகிறது என்று சொல்லி இருக்கிறார். வலி கடுமையா என்று கேட்டு அதிகமான கோட்டிசோனை ஊசிமூலம் மருத்துவர் ஏற்றி விட வளைந்த முதுகோடும் நிறைந்த வலியோடும் நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தார்.

சரி விடயத்திற்கு வருவோம்.

கழக நிர்வாகத்தில் இருந்தவர்கள் மிகத் திறமைசாலிகள். ஆகவே எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கும் என்ற மித மிஞ்சிய நம்பிக்கை என்னிடம் இருந்தது. எனது வேலை முடிந்து வந்து கழக அலுவலகத்திற்கு தொலைபேசி எடுத்தேன். தொலைபேசியில் வந்தவர் குரல் எனக்கு புதிதாக இருந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளை தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் தங்கள் பதவிகளை விட்டு விலகி விட்டதாக தொலைபேசியில் அவர் சொன்னார். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏன்? எதற்கு? என கேள்விகள் என்னிடம் இருந்தும் நான் அவரைக் கேட்க விரும்பவில்லை. சரியான பதில் அவரிடம் இருந்து வராது என எனக்குத் தெரியும்.

ஆனால் அவரிடம் இருந்து ஒரு தகவல் வந்தது. அது இதுதான். „உங்களை தலைவர் பதவியைப் பொறுப்பேற்று செய்யுமாறு லோரன்ஸ் திலகர் சொல்லி இருக்கிறார். அவர் நாளை காலை பத்துமணி வரை இங்கே இருப்பார். உங்கள் நல்ல முடிவை அறிவியுங்கள்'

இதையும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிர்வாகத்தில் இருந்த ஐவரில் மூவர் அந்தப் பதவிகளில் இனி இல்லை. அவர்கள் தாங்களாகவே விலகி விட்டனரா? அல்லது விலகும்படி நிர்பந்தப் படுத்தப் பட்டார்களா தெரியாது. அடுத்த இருவரில் ஒருவர் நான். பிராச்சாரப் பகுதிக்கான பொறுப்பு என்னிடம் இருந்தது. . மற்றையவர் உதவிச் செயலாளராக இருந்தவர். அவர் யேர்மனியில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமை ஆற்றிக் கொண்டிருந்தார். அது யேர்மனிய மக்களிடம் எங்கள் பிரச்சினைகளை எடுத்துச் செல்வதற்கு எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றது. போதாததற்கு அப்பொழுது ஏன் இப்பொழுதும் கூட புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் யேர்மனிய வடக்குப் பகுதியிலேயே அவரும் வசித்து வந்தார். ஆதலால் அவரிடம் பொறுப்பைக் கொடுப்பதே நல்லது என்று நான் நினைத்தேன். அதனால் மறுநாள் காலை எனது முடிவை அலுவலகத்திற்கு அறிவித்தேன். அந்தப் பொறுப்பை ஏற்க உதவிச் செயலாளருக்கும் விருப்பம் இருந்தது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் முடிவு மட்டும் வேறாக இருந்தது.

இது விடயமாக கலந்து உரையாடுவதற்கு எனக்காக ஒரு கூட்டத்தை நான் இருக்கும் மாநிலத்திலேயே ஏற்பாடு செய்தார்கள். வாகன வசதி இல்லை, வேலையில் விடுமுறை இல்லை என்று „டிமிக்கி' கொடுக்கிறாயா. இப்ப வா பார்க்கலாம் என்பது போல் அவர்களது கூட்ட ஒழுங்கு இருந்தது. கூட்டத்தில் கடுமையான வாக்கு வாதங்கள். ஒரு கழகத்தின் நிர்வாகக் குழுவை கூட்டி அங்கு கருத்துகளை உள் வாங்கி ஆரோக்கியமான முடிவை எடுக்காமல் எடுத்தோமா கவிழ்த்தோமா என்ற நிலை ஏற்புடையது அல்ல என்ற வாதம் என்னிடம் இருந்தது. குறைந்த பட்சம் அவர்கள் விலகியதையோ அன்றி விலக்கப் பட்டிருந்தாலோ அதற்கான காரணங்களை நிர்வாகக் குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என்று நான் ஆணித்தரமாக நின்றேன்.

எனது பலத்த வாதத்திற்கான இறுதிப் பதில் இப்படி இருந்தது.

„இதுதான் முடிவு. அமைப்புக்குள் இருந்து கொண்டு இப்படியான கேள்விகளைக் கேட்கக் கூடாது. அதுக்கு நாங்கள் பதில் தர முடியாது'

இந்தப் பதிலோடு எனது தலைக்குள் „சுர்' என்று ஏதோ நுளைந்தது போல் இருந்தது.

„அப்படியானால் நானும் விலகிக் கொள்கிறேன்'

கூட்டத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்.

கூட்டம் முடிவடைந்தது.

கூட்டத்திற்கு வந்தவர்களிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தேன். கூட்டத்திற்கான பொறுப்பாளர் என்னருகே வந்தார்.

„இவ்வளவு கோபம் உங்களுக்குக் கூடாது „ என்றார்.

எனது கோபத்திற்கான காரணம் அவரது பேச்சுத்தான். ஆனாலும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன்.

„இப்பொழுது நான் விலகி விட்டேன்தானே. எனது கேள்விக்கு என்ன பதில்?'

„அமைப்புக்கு வெளியில் இருந்து கொண்டு நிர்வாகம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்பவர்களுக்கு நாங்கள் பதில் தர முடியாது'

ஆடிப் போய் இரண்டு அடி பின்னால் போனேன். ஆனால் அரசியலை புரிய ஆரம்பித்தேன்.

மூனா
23.12.2014

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை