தூசு தட்டியே காசு பிழைத்தவர்

ஒரு விடயத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அது சிறிதோ பெரிதோ அதை மிகத் துல்லியமாக ஆராய்ந்து முடிவு எடுப்பதில் யேர்மனியர்கள் வல்லுனர்கள். அவர்களுடனான பல ஆண்டுகள் பழக்கத்தினால் இதை நான் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே அதை நான் அறிந்து கொண்டேன். புகலிடம் தேடி யேர்மனிக்கு வந்த பொழுது அவர்கள் எங்களைக் கையாண்ட விதத்திலேயே அவர்களின் திறமையைப் புரிந்து கொண்டேன்.

எண்பதுகளில் யேர்மனிக்கு புகலிடம் தேடி வந்த பொழுது நிறையவே சிரமப் பட்டிருக்கிறோம். படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் அனுமதி இல்லாமல் வாழ்க்கையில் இரண்டு வருடங்களை முகாம்களுக்குள்ளேயே வீணாக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என்று கனடா, லண்டன் எனப் பலர் பறந்து விட்டார்கள். எஞ்சியவர்களை முகாமில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பி விட்டார்கள். ஒரு இனத்தை ஒரே இடத்தில் வாழ அனுமதித்தால் அங்கே அவர்களால் தங்களது சமூகத்திற்கு இடையூறு வந்து விடும் என்ற முன்னெச்சரிக்கையே அது.

பரவலாக ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு மூன்று பேர்களாக குடியேற்றப் பட்டோம். பழைய நண்பர்களைச் சந்திப்பதாக இருந்தால் நிறையத் தூரம் பயணிக்க வேண்டி இருக்கும். சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ள வசதி இருக்கவில்லை. பிரயாணச் சீட்டு வாங்கி பயணிக்க கையில் காசு கிடையாது. இதற்கு மேலாக அகதிக்கான  அங்கீகாரம் கிடைக்கும் வரைக்கும் அவர்  அவரது நகரத்தை விட்டு வேறு நகரத்துக்குச் செல்ல அனுமதி கிடையாது. மீறிப் போய் பிடிபட்டால் தண்டம் செலுத்த வேண்டும். அந்தத் தண்டம் ஏறக்குறைய ஒரு அகதிக்கான ஒரு மாதக் குடுப்பனவுக்கு சமமாக இருந்தது. இதனால் அடங்கி ஒடுங்கி அவரவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரங்களிலேயே அமைதியாக இருந்து விட்டோம்.

இப்படி அங்கொன்று இங்கொன்றாகப் பரவலாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்களை சந்தித்து தமிழர் புனர் வாழ்வுக் கழக யோமனிக்கிளையில் எங்கள் சேவைகளைச் செய்வதற்கு நாங்கள் நிறையவே உழைத்திருக்கிறோம்.

ஒருநாள் நண்பர் தினா (தினகரன்)வுடன் றாவன்ஸ்பேர்க் என்ற நகரத்துக்கு புனர்வாழ்வு பணி நிமித்தமாகப் பயணித்துக் கொண்டிருந்தேன்.

„புதுசா ஒரு கசெற் வந்திருக்குது கேட்டுப் பாருங்கோ' தினா சொல்லும் பொழுது எனக்கு மகிழ்வாக இருந்தது. தூரப் பயணங்கள் போகும் பொழுது அவரவர்களுக்குக் கிடைக்கும் புதிய பாடல்கள் அடங்கிய கசெற்றுகளை எடுத்து வந்து கூடப் பயணிப்பவர்களை மகிழ்விப்பது வழக்கம். அந்த வகையிலேயே தினா அந்த கசெற்றைக் கொண்டு வந்திருந்தார். அவர் கசெற்றை போடும் பொழுது அவரது முகத்தில் நமட்டுச் சிரிப்பு இருப்பதை அவதானித்தேன். அந்தச் சிரிப்பின் அர்த்தத்தை பின்னால் புரிந்து கொண்டேன்.

அவர் போட்ட கசெற்றில் இருந்து இசையோடு பாடல் வரவில்லை. மாறாக வசையோடு கவிதை வந்தது.

'பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயில் எரிகையில் விட்டு
விமானத்தில் ஏறி பறந்தவர்
வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்
விட்டுப் பறந்த கோழைகள் நாளையே
வீடு திரும்பினால் காறியே துப்புவோம்
கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்
கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்
அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று
அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்
தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென
தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்
துப்புக் கெட்டவர் அகதி லேபலில்
தூசு தட்டியே காசு பிழைத்தனர்
ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்
எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்
போகட்டும் பாய்விரித்தால் போதும்
படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி
நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்
தப்பிப் பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி
கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும்'


கவிதையை முழுவதுமாகவே கேட்டேன். வாகனத்தைச் செலுத்திய படியே தினா என்னைப் பார்த்து அடிக்கடி சிரித்துக் கொண்டதை பார்த்தும் பாராமல் இருந்தேன்.

'என்னமாதிரி எங்களை கிழிக்கிறாங்கள் எண்டு பாத்தீங்களே?'

தினாவின் கேள்விக்கு நான் நேரடியாகப் பதில் தரவில்லை

'நிப்பாட்டிறதுக்கு இடம் வந்தால் பாத்து நிப்பாட்டுங்கோ. கொஞ்சம் ஆறி இருந்திட்டுப் போவம்'

'கவிதையைக் கேட்ட உடனே குழம்பிட்டீங்கள் போலை. இதை விடுங்கோ. இதெல்லாம் கேட்டால்  ஒண்டும் செய்யேலாது. நேற்றுத்தான் கிடைச்சுது. கேட்டுப் பாத்த உடனை யோசிச்சன் நீங்களும் கேட்டால் நல்லா இருக்கும் எண்டு'

வாகனம் நெடுஞ்சாலையை விட்டு விலகி இளைப்பாறும் தரிப்பிடத்தில் நின்றது.

கொஞ்சம் இளைப்பாறினோம். கவிதை எனக்குப் பிடிக்காததால் தினா அதைப் பற்றி கதைக்க வில்லை. மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.

'அந்த கசெற்றை எடுத்துப் போட்டு இதைப் போடுங்கோ' தினா தந்த கசெற்றைப் போட்டேன்.

'எங்கை அது?'

'எது?'

'அந்த கவிதை கசெற்'
'நீங்கள் நிப்பாட்டின இடத்திலை இருந்த குப்பைத் தொட்டிக்குள்ளை நான் அப்பவே போட்டுட்டன்'

'புதுவை இரத்தினதுரையின்ரை கவிதை எண்டதாலை நான் காசு குடுத்து வேண்டினதப்பா அது'

'காசு குடுத்து திட்டு வேண்டுற  ஆளை இப்பதான் பாக்கிறன்'
 
அதற்குப் பிறகு நடந்த அர்ச்சனைகளை இங்கே நான் எழுதவில்லை. ஆனால் எனது கூற்று இதுவாக இருந்தது. உடனடியாக இந்த கசெற் வெளிநாடுகளில் தடை செய்யப் படல் வேண்டும். இல்லை என்றால் இப்பொழுது செய்கின்ற சேவையை நிறுத்தி விட்டு இந்த கசெற்றுக்கு எதிராக செயற்படுவேன்.

அந்த கசெற்றுக்கு எதிராக நான் மட்டும் அல்ல மேலும் பலர் குரல் கொடுத்தார்கள்.

அது விற்பனையில் இருந்து எடுக்கப் பட்டு விட்டது.

2012 இல் புனர்வாழ்வுப் பணிக்காக தாயகம் சென்றிருந்தேன். பலரைச் சந்தித்தேன்.
'புதுவையைப் போய்ப் பார்க்கவில்லையா?' என கவிஞர் நாவண்ணன் கேட்டார்.

'பார்க்க வேண்டிய அவசியம் இல்லை' என்றேன்.

அதே ஆண்டு மாவீரர் தினத்துக்காக புதுவை இரத்தினதுரை ஐரோப்பாவிற்கு வந்திருந்தார்.

அவர் வருகையை அறிந்த எனது இணைய நண்பர், அவர் நூறன்பேர்க் என்ற நகரத்தில் இருக்கிறார், அவருக்கு புதுவையை சந்திக்க ஆவலாக இருந்திருக்க வேண்டும். எனக்கு தொலைபேசி எடுத்து 'சுவிஸில் அவர் எங்கிருக்கிறார்? எப்பொழுது யேர்மனிக்கு வருவார்? எங்கு தங்குவார்?' என பல கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றிகும் 'தெரியாது' என்று பதில் சொன்னேன்.

அவருக்கு என்மேல் வந்தது  எரிச்சலா கோபமா என்று தெரியவில்லை 'உங்களுக்கு ஆளுமை பத்தாது' என்று சொல்லி விட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டார்.

சுவிஸ் நாட்டில் நடந்த மாவீரர் தினத்தில் கவிதை சொல்லி விட்டு, புகலிடத் தமிழர்கள் அவருக்காக ஒழுங்கு செய்த பிரத்தியேக தனி விமானத்தில் யேர்மனி மாவீரர் தினத்தில் கவிதை சொல்ல டோர்ட்மூண்ட் வந்து சேர்ந்தார் புதுவை இரத்தினதுரை.

மாவீரர் தின மண்டபத்தில் முன் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு மூன்று இருக்கைகள் தள்ளி புதுவை இரத்தினதுரை அமர்ந்திருந்தார். நான் நிகழ்ச்சியிலேயே கவனம் செலுத்தினேன்.

அவரது கவிதைக்கான நேரம் வந்தது.

'நான் போட்டிருக்கும் இந்தக் காலணி புலம் பெயர் தம்பி ஒருவர் வாங்கித் தந்தது. இந்த சேர்ட், நான் போட்டிருக்கும் ரவுசர்  எல்லாம் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிஸில் வாழும் தம்பிகள் வாங்கித் தந்ததுதான். புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்' என்று இன்னும் என்னென்னவோ சொன்னார். ஒவ்வொரு வார்த்தை சொல்லும் பொழுதும் மேலே பார்த்து நின்று நிதானமாகச் சொன்னார்.

பக்கத்தில் இருந்தவர் கேட்டார், 'எதுக்கு புதுவை அடிக்கடி மேலே பாக்கிறார்?'

எடுத்த கவிதை மறந்து போயிருக்கும். அதுதான் நினைத்துப் பார்க்கிறார்.

மூனா
27.12.2014

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை