நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7

வெண்புறாவில் நாங்கள் தங்குவதற்காக கொல்கருக்கு ஒரு அறையையும் எனக்கும் எனது மனைவிக்கும் ஒரு அறையையும் ஒழுங்கு செய்திருந்தார்கள். மலசல கூடத்தை ஐரோப்பிய முறையில் அமைத்திருந்தார்கள். அதனருகே ஒரு குளியல் அறை இருந்தது. மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் பாவனையில் இருந்தது. அதுவும் மட்டுப் படுத்தப் பட்டிருந்தது. இரவு பத்து மணிக்கு மேலே அரிக்கன் விளக்குதான் உதவி.

"நீங்கள் வாறதெண்டு தகவல் கிடைச்ச உடனை அவசர அவசரமாகக் கட்டினது" அன்ரனி அப்படிச் சொன்ன பொழுது, எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறார்களே. எங்களைத் தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே எல்லா ஒழுங்குகளையும் செய்திருக்கிறார்கள். இவர்களை விட்டு விட்டு ஹொட்டேலில் போய் தங்கி எதைக் காணப் போகிறோம் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
 
„நாங்கள் ஒன்றும் சுற்றுலாவுக்கு வரவில்லையே. சேவை செய்யத்தானே வந்திருக்கிறோம். இந்த வசதி எனக்குப் போதும்' என்று கொல்கர் பச்சைக் கொடி காட்டினான்.

கொல்கர் அவ்வாறான ஒரு கட்டிலை தனது வாழ்வில் பார்த்திருக்கவே மாட்டான். டச்சுக்காலத்துக் கட்டில் ஒன்று அவன் உறங்குவதற்காக ஒதுக்கப் பட்டிருந்தது. தனது சௌகரியங்களைப் பற்றி அவன் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. தருவதை மகிழ்வாகப் பெற்றுக் கொண்டான்.

வெண்புறா நிலையத்தைப் பற்றிய சில தகவல்களை அங்கே எடுத்துக் கொண்டேன். வரவேற்பகம், பணியகம், பார்வையாளர் தங்குமிடம், தொழிற்கூடம், பயனாளிகள்  ஆண், பெண் இருபாலாரும் தங்குவதற்கான விடுதிகள், பணியாளர்கள் தங்குவதற்கான விடுதியென பல கட்டிடங்கள் அங்கே இருந்தன. 32 பேர் அங்கே கடமையில் இருந்தனர். அவர்களில் 15 பேர் தொழில் நுட்பவியலாளர்கள். மற்றவர்கள் திட்ட இணைப்பாளர்,  நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணிப்பாளர்கள், மருத்துவர் என கடமையில் இருந்தார்கள். இது தவிர கண்ணிவெடி அகற்றும் பிரிவிலும் பலர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் ஆபத்தானது. கண்ணிவெடிகளைக் கண்டறியும் கருவிகள் எதுவும் இன்றியே அவர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். இலங்கை ரூபா 4,000 தான் அவர்களது ஆபத்தான வேலைக்கான மாதாந்த ஊதியமாக இருந்தது. நாங்கள் சென்றிருந்த நேரம் வரை அவர்கள் 12,000க்கு மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றியதாக பதிவேட்டில் குறிப்பு இருந்தது.

வீதிகள் தோறும் கண்ணிவெடி விழிப்புணர்வுப் படங்களை பெரியளவில் வைத்திருந்தார்கள். கண்ணிவெடி அகற்றப் படாத இடங்களை இனம் காணும் விதமாக எச்சரிப்புப் பலகைகளை வைத்திருந்தார்கள்.

அன்று மாலை கொல்கருடன்  வீதியில் சிறிது நடந்தோம். வெண்புறா நிலையத்தில் இருந்து அரசியல்துறை அலுவலகத்துக்கு சிறிது அப்பால் சென்று திரும்பிக் கொண்டிருந்தோம். வீதி ஓரத்தின் மரத்தடியில் ஒரு மூதாட்டி கச்சான் விற்றுக் கொண்டிருந்தார். அந்த மூதாட்டியைப் பார்த்து கொல்கர் தனது நடையை சிறிது தளர்த்தினான்.

„நடந்து களைத்துப் போய் விட்டதா? „ நான் அவனைக் கேட்டேன்

'பார், அந்த மூதாட்டியை. நாங்கள் இந்த வழியால் போகும் போது பார்த்தேன். அந்தத் தட்டில் பன்னிரண்டு பொட்டலங்கள் இருந்தன. அந்தப் பன்னிரண்டும்  இன்னும் அப்படியே இருக்கின்றன. ஒருத்தரும் வாங்கக் காணோமே'

„பன்னிரண்டு என்பது அவரின் கணக்காக இருக்கலாம். விற்பனையாகும் பொழுது பெட்டிக்குள் இருந்து புதிதாக எடுத்து தட்டில் வைத்திருக்கலாம்' என்றேன்.

„இருக்காது பொருள் விற்றிருந்தால் அவரின் முகத்தில் மகிழ்ச்சி இருந்திருக்கும்.' கொல்கர் என்னை மறுதலித்தான்.
„ அந்தப்  பொட்டலத்துக்குள் என்ன இருக்கும்?'

„கச்சான்' என்றேன்.

„நான் வாங்கிக் கொள்கிறேன்' என்றான்.

மூதாட்டியிடம் இருந்து ஒரு சரை  கச்சானை எடுத்து அவனிடம் கொடுத்தேன். தனக்கு முழுவதும் வேண்டும் என்றான். மேல் தட்டில் இருந்தது பன்னிரண்டு. உள்ளே பெட்டிக்குள் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் கொல்கரின் விருப்பத்தை மறுக்க நான் விரும்பவில்லை.

'ஆச்சி, கச்சான் இவ்வளவுதானோ? பெட்டிக்குள்ளை இன்னும் இருக்குதோ?

„இவ்வளவுதான் தம்பி இருக்கு'

கொல்கரின் கணிப்பு சரியாக இருந்தது.

„இவ்வளவு சின்னதாக கச்சானை இப்பொழுதுதான் பார்க்கிறேன்' என்றான்.

„மரபணுக்களை மாற்றி நீங்கள் பெரிதாக்குகிறீர்கள். நாங்கள் இயற்கையானதுடன் இருந்து விட நினைக்கிறோம்'

கொல்கர் அந்த மூதாட்டிக்கு பணத்தைக் கொடுத்து விட்டு கச்சான் சரைகளை வாங்கிக் கொண்டான்.

„இவ்வளவு கச்சானையும் என்ன செய்யப் போகிறாய்?'

„வெண்புறாவில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாம்' என்றான்.

முதல் நாளைய பயணக் களைப்பு. இரவு சாப்பாடு முடிந்ததும் படுக்கைக்குப் போய் விட்டோம்.

மறுநாள் விடிந்திருந்தது தெரிந்தது. எழுந்து கொள்ள மனமில்லை. இன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு படுக்கையில் இருந்தேன். அறைக்கு வெளயில் இருந்து „அங்கிள்.. அங்கிள்.. „  என்று கூப்பிடும் சத்தம் கேட்டது. குரலில் ஒரு பதட்டம் இருந்தது.

ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது. கதவைத் திறந்து வெளியே வந்தேன்.  வெண்புறா பணியாளர்களில் ஒருவரான கண்ணன்  பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான்.
என்னைக் கண்டவுடன், „அங்கிள்.. அங்கிள்.. யேர்மன்காரன் (இன்னமும் கொல்கரின் பெயர் அவனுக்கு பாடம் வரவில்லை) கட்டிலிலை பேயடிச்ச மாதிரி இருக்கிறான். கோப்பி  கொண்டு போய் மேசையிலை வைச்சிட்டு வந்திட்டன்'

என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு கொல்கரின் அறைக்குச் சென்றேன். காலைவணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவனும் வணக்கம் சொன்னான். இரவு நித்திரை எப்படி என்று கேட்டேன். படுக்க முடியவில்லை என்று பதில் வந்தது. கட்டிலில் மெத்தை இல்லாதது அவனுக்கு சிரமமாக இருந்திருக்கும் என நினைத்தேன். ஆனால் அவனது நித்திரையின்மைக்குக் காரணம் வேறாக இருந்தது. கொல்கர் கட்டிலில் இருந்து சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்தேன்.

எறும்புகள் கூட்டம், இரண்டு வரிசை கட்டி ஒரு வழியாகப் போய் மறுவழியாக திரும்பி வந்து  கொண்டிருந்தன. அவை போகும் இறுதி இடத்தைப் பார்த்தேன். நேற்று மூதாட்டியிடம் வாங்கிய கச்சான் சரைகளே அவற்றின் இறுதி இடமாக இருந்தது.

„அந்த எறும்புகள் பேசாமல் கச்சானை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். என் உடம்பிலும் அல்லவா ஊர்வலம் போக ஆசைப்பட்டிருக்கின்றன' கொல்கரின் வார்த்தைகளில் பரிதாபம் தெரிந்தது. உடலில் ஆங்காங்கு சிவந்திருந்தன.

இந்த அமளியைக் கேட்டு அன்ரனி, கொல்கரின் அறைக்குள் வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டு „முதலிலை அந்தக் கச்சான்சரைகளை தூக்கி எறிஞ்சு போட்டு அறையைச் சுத்தம் செய்யுங்கோ. கட்டில் கால்களுக்கு டீடீரி கொஞ்சம் தூவி விடுங்கோ' என்று தனது பணியாளர்களிடம் பணித்தார்.

துரிதகதியில் அறை சுத்தம் ஆயிற்று. எறும்புகள் இப்பொழுது வெண்புறா நிலையத்திற்குப் பின்புறமாக இருந்த காணியின் குப்பைமேட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை