நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8

சொன்னபடி அன்று காலை இனியவனால் வரமுடியவில்லை. அவர் தனது உதவியாளரை அனுப்பி இருந்தார்.

யேர்மனியில் விட்டு வந்த பெட்டிகள் வந்து சேரவில்லை. வவுனியாவில் கொடுத்து விட்டு வந்த பொதியைப் பற்றிய தகவலும் வரவில்லை. ஆகவே இன்று எந்தவித வேலையும் இல்லை. அதுவரை ஏதாவது இல்லங்களைப் பார்வையிடலாம் என்று தோன்றியது. அதை அவரிடம் சொல்ல வாருங்கள் என்று கூட்டிப் போனார்.

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்துக்குப் போய் அங்கு துயிலும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். அங்கிருந்து குருகுலம் போய் பிள்ளைகளைச் சந்தித்தோம். கொல்கருக்கு அந்த பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றியும், குருகுலத்தின் சேவையைப் பற்றியும் சொன்னேன். அந்தப் பிள்ளைகளின் மேம்பாட்டுக்கு நான் பணம் அன்பளிப்புச் செய்ததைக் கண்டு, கொல்கர் தானும் பணம் அன்பளிப்புச் செய்தான். அந்தக் கள்ளம் கபடம் இல்லாத பிள்ளைகளை கொல்கருக்குப் பிடித்துப் போனது. நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.

குருகுலம் இல்லத்தோடு சேர்ந்து ஒரு காணி இருந்தது. அதில் பிள்ளைகளுக்கான விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்க விரும்புவதாகவும் அதற்கு நிதி தேவைப்படுவதாகவும் குருகுலத்தின் நிர்வாகி சொன்னார். அதை நான் குறிப்பு எடுத்துக் கொண்டேன். யேர்மனிக்குத் திரும்பிய பின் குருகுலத்துக்கான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனது அந்த நினைப்பு ஏனோ நிறைவேறாமலே போயிற்று. யேர்மனியில் சிறுவர் விளையாட்டு மைதானங்களைக் காணும் பொழுதெல்லாம் இன்றும் குருகுலத்துப் பிள்ளைகள் நினைவில் வந்து போகிறார்கள்.

வெண்புறா நிறுவனத்துக்கு எதிராக வீதியின் மறுபக்கத்தில் இருந்த கட்டிடத்திலேயே சமையல் செய்வார்கள். அந்தச் சமையலுக்கான உணவுப் பொருட்களை விடுதலைப் புலிகளின் நிர்வாக அமைப்பே  வழங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்து என்ன கிடைக்கிறதோ அதுவே அன்றைய சாப்பாடு ஆகிறது. எல்லோருக்கும் ஒரே சாப்பாடுதான்.  பகிர்ந்து மகிழ்ந்து உண்டோம்.

மறுநாள் காந்தி இல்லம் சென்று சிறுவர்களைச் சந்தித்தோம். குருகுலத்துக்கு அன்பளிப்பு செய்ததைப் போல் அந்தச் சிறார்களின் மேம்பாட்டுக்காக கொல்கரும், நானும் அன்பளிப்பு கொடுத்தோம். குருகுலமும் சரி, காந்தி இல்லமும் சரி,  நாங்கள் அதாவது புலம் பெயர் மக்கள் நீண்ட வேலைத் திட்டங்களை எடுத்து செயற்பட வேண்டிய தேவைகள் இருப்பதை உணர்த்தின.

அடுத்து பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்திற்குச் சென்றோம். அங்கே வசதிகள் என்பது மிகவும் குறைவாகவே இருந்தது . தரையில் பாய்களை விரித்து அதில் இருந்து கொண்டே அன்றாடம் தங்கள்  பயிற்சிகளை அங்கிருந்த பெண்கள் மேற்கொண்டிருந்தார்கள். விதவைகள், பாதிப்புக்குள்ளான பெண்கள் எனச் சிலரை அங்கே சந்திக்க முடிந்தது. பெண்கள் மீது, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீது எனது மனைவி அதிகம் கவனம் செலுத்துவதால் அந்த இடத்தில் நாங்கள் அதிக நேரம் நிற்க வேண்டியதாயிற்று.  பயிற்சி கொடுப்பதற்காக தங்களுக்கு  சில தையல் இயந்திரங்கள் தேவைப் படுகின்றன என பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலைய நிர்வாகி  கோரிக்கை ஒன்றை எங்களிடம் வைத்தார். ஏற்பாடு செய்வதாக உறுதி தந்தேன்.

பெண்கள் புனர்வாழ்வு அபிவிருத்தி நிலையத்தில் இருந்து திரும்பி வரும் போது, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் நான் மட்டும் இறங்கிக் கொண்டேன். என்னைக் கண்டதும் இனியவன் அலுவலகத்தில்  இருந்து வெளியே வந்து எங்களது நலன்கள் தேவைகளை விசாரித்துத் தெரிந்து கொண்டார். எதற்காக நான் அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன் என்ற கேள்வி அவரிடம் இருந்திருக்கும். ஆனால் என்னிடம் அவர் எதுவும் கேட்கவில்லை. நானே ஆரம்பித்தேன்.

„லோறன்ஸ் திலகரைப் பார்க்க வேண்டும்'

„அவருக்கு இப்ப நேரமிருக்குமோ தெரியாது,  கேட்டிட்டு வாறன்'  வார்த்தைகள் வந்த வேகத்துடனேயே இனியவன் உள்ளே போனார்.
ஐந்து நிமிடங்களுக்குள் சந்திப்பு ஏற்பாடாகியது.

சந்திப்புக் கூடத்தில் காத்திருந்தேன். வேகமான நடை போட்ட படி லோறன்ஸ் திலகர் வந்தார். என்னை அவர் முன்னர் சந்தித்தது கிடையாது. நான் யாரென்றும் அவருக்குத் தெரியாது.  எதற்காக வந்திருக்கிறேன், எதற்காகத் தன்னைச் சந்திக்க விரும்புகிறேன் என்ற கேள்விகள் அவருக்குள் கண்டிப்பாக இருந்திருக்கும்.

நானே என்னை அறிமுகம் செய்து கொண்டேன். 1992 இல் தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மன் கிளையில் அவர் ஏற்படுத்திய மாற்றத்தில் எனக்கு உடன் பாடில்லை என்பதை அவருக்குச் சொல்வதே அவருடனான சந்திப்பில் எனது முக்கிய நோக்கமாக இருந்தது.  நான் சொல்வதை அவர் அமைதியாகக் கேட்டார்.

அவர் பதில் தருவதை சாமர்த்தியமாகத் தவிர்க்கிறார் என்பதை அவருடனான உரையாடலின் பொழுது புரிந்து கொண்டேன். விடயத்தைத் திசை திருப்பினேன். நாட்டு நடப்பு, புனர்வாழ்வு எனப்  பலதையும் பேசினோம்.

„நீங்கள் வன்னிக்கு வந்தது, மற்றும் உங்களது சேவைகளை அரசியல் துறைக்கு தெரியப்படுத்துவது உங்கள் கடமை. அவர்களைச் சந்திப்பதற்கு ஒரு விண்ணப்பத்தை எழுதி அவர்களது அலுவலக த்தில்  கொடுத்து விடுங்கள்' என்று சொன்னார். அவரிடம் இருந்து விடைபெறும் பொழுது அவரின் மதிப்பு என்னிடம் உயர்ந்திருந்தது.

மாலையில் வெண்புறாவின் முற்றத்தில் நானும், கொல்கரும், அன்ரனியும் பிளாஸ்ரிக் நாற்காலியில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். முற்றத்து மண்ணில் இருந்த உடைந்த போத்தல் துண்டு ஒன்றை கொல்கர் எனக்குச் சுட்டிக் காட்டினான்.

„இங்கை வேலை செய்யிற பலருக்கு ஒரு கால் இல்லை. போதாததற்கு செருப்பும் போடுறதில்லை. இப்பிடியான கண்ணாடித் துண்டுகளால் ஆபத்திருக்கு'

கொல்கர் எனக்குச் சொன்னதை அன்ரனி புரிந்து கொண்டிருக்க வேண்டும் தூரத்தில் நின்ற பணியாளரைக் கூப்பிட்டு அந்தப் போத்தல் துண்டை எடுக்கும் படி பணித்தார்.

அதை எடுப்பதற்கு வந்தவரும் ஒரு காலை இழந்திருந்தார். இதைப் பார்த்த கொல்கர் என்னிடம் சொன்னான் „நானே அந்தப் போத்தல் துண்டை எடுத்திருக்கலாம்' என்று.
அந்தப் பொழுதில் இருந்து வெண்புறா முற்றத்தில் இருந்த கண்ணாடித் துண்டுகளைக் காணும் நேரங்களில் எல்லாம் நானும், கொல்கரும் அவைகளை எடுத்துப் பாதுகாப்பான இடங்களில் போட ஆரம்பித்தோம். நாளடைவில் அங்கிருந்த எல்லோரும் அந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். அதில் அன்ரனியும் இருந்தார்.

சொன்ன படியே வவுனியவில் நாங்கள் கொடுத்து விட்டு வந்த பொதி இரண்டாம் நாள்  வந்து சேர்ந்தது. கொல்கருக்கு இப்பொழுது என்மேல் உள்ள நம்பிக்கை இன்னும் வலுத்திருந்தது.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை