நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10

கொழும்பில் இருந்து வன்னிக்கு என்னை அழைத்துக் கொள்ள வந்த சிவா மாஸ்ரருக்கும், என் முன்னால் நிற்கும் இந்த சிவா மாஸ்ரருக்கும் இடையில் நிறையவே வித்தியாசங்களைக் காண முடிந்தது. அளந்துதான் பேசினார். அதிலும் ஆழம் தெரிந்தது. பேச்சில் ஆளுமையும் சேர்ந்திருந்தது.

யேர்மனியில் இருந்து வன்னிக்குப் புறப்படும் பொழுதே யார் யார் என்னைச் சந்திப்பார்கள் என்று ஓரளவு கணித்து வைத்திருந்தேன். அவர்களைச் சந்திக்கும் பொழுது மரியாதை நிமித்தம் அவர்களுக்கு எதைக் கொடுப்பது என்று என்னுள் தெளிவில்லாமல் இருந்தது. அதைக் கொடுக்கலாமா இதைக் கொடுக்கலாமா என்று குழம்பிப் போய் இருந்த எனது கண்ணில் பட்டதுதான் பத்மநாப ஐயர் தமிழியல் ஊடாக வெளியிட்ட `கண்ணில் தெரியுது வானம்´ புத்தகம். பல புலம் பெயர் எழுத்தாளர்கள் அதில் எழுதி இருந்தார்கள். போதாததற்கு மூனாவின் சில கேலிச் சித்திரங்களும் அதில் இருந்தன. தமிழ் கார்டியனில் வெளியாகி அப்பொழுது அதிகம் பேசப்பட்ட கேலிச்சித்திரமும் அவற்றில் ஒன்று. Norway சமாதான பேச்சுக்கு வருகிறது. ஒரு புத்த பிக்கு No way என்று சொல்கிறார். இதுதான் அந்தக் கேலிச்சித்திரம். அந்தப் புத்தகங்களையே அன்பளிப்பாக நான் சந்திப்பவர்களுக்கு கொடுப்பதென தீர்மானித்து எடுத்து வந்திருந்தேன்.
இப்பொழுது கஸ்ரோவைச் சந்திக்க வரும் பொழுது ஒரு புத்தகத்தையே நான் கொண்டு வந்திருந்தேன். „உங்களுக்கு பிறகு தருகிறேன்“ என்று சிவா மாஸ்ரரிம் சொல்லி விட்டு கஸ்ரோவுக்கு ´கண்ணில் தெரியும் வானம்` புத்தகத்தைக் கொடுத்தேன்.

„முதலாளி இன்னும் புத்தகங்களோடைதான் இருக்கிறார் போலை' கஸ்ரோ சிரித்தபடி சொன்னார்.

„இப்போ நான் முதலாளி கிடையாது. ஐரோப்பியத் தொழிலாளி“

„நீங்கள் அப்பவும் சரி இப்பவும் சரி எங்களுக்கு முதலாளிதான்“

மணிவண்ணன் மட்டுமல்ல பல மாணவர்கள் அன்று என்னை முதலாளி என்றே அழைத்தார்கள். எனது நண்பர்கள்தான் இவரென்ன எங்களுக்கு பெரிய முதலாளியோ என்று பின்னுக்கு இருந்த மூன்றெழுத்துக்களை வெட்டி விட்டு முதல் எழுத்துடன் என்னை அழைக்க ஆரம்பித்தார்கள். யேர்மனியில் நான் அகதிகள் முகாமில் இருந்த பொழுது அங்கு வந்த பாடசாலை நண்பன் ஒருவன் `மூனா´ என என்னை அழைக்கப் போய் முகாமில் எல்லோருக்கும் அது எனது பெயராகப் போனது. அந்தப் பெயரே எனக்கு இப்பொழுதும் நின்று நிலைக்கிறது.

„இஞ்சை ஒரு புத்தகக் கடை... இல்லை இல்லை பொத்தகக் கடை இருக்கு. ஓமெண்டால் சொல்லுங்கோ. பழையபடி ஒரு கலக்கு கலக்கலாம்' கஸ்ரோ தனது விருப்பத்தைச் சொன்னார்.

„அவர் அங்கை இருக்கிறதாலைதானே இப்ப இஞ்சை வந்து உதவி செய்யக் கூடியதா இருக்கு“ சிவா மாஸ்ரர் சொன்னதை கஸ்ரோ ஏற்றுக் கொண்டார்.

„அதுவும் சரிதான்“

கதைகள் இயல்பாகப் போய்க் கொண்டிருந்த நேரம் மெதுவடையும், தேநீரும் வந்தன. வடை பெரிதாக இருந்தது. வடையில் இருந்து வந்த வாசனை, அது இப்பொழுதுதான் சூடான எண்ணைக் குளியல் முடித்திருக்கிறது என்று காட்டியது. நான் வடையைப் பார்த்து விட்டு கஸ்ரோவைப் பார்த்தேன்.

„என்ன பாத்துக் கொண்டிருக்கிறீங்கள் சாப்பிடுங்கோ. இஞ்சை பொம்பிளையள் இல்லை. எல்லாரும் ஆம்பிளையள்தான். இது ஆம்பிளை சுட்ட வடை'

„அதுதான் வடை இவ்வளவு பெரிசா இருக்கு. யேர்மனியிலை எங்கடை ஆக்கள் கேட்டால் கஸ்ரோட்டை போனால் பெரிய்..ய்ய்ய வடை தருவார் எண்டு சொல்லலாம்“

„கஸ்ரோவைப் போலை வடையும் பெரிசு எண்டுறியள்“

„இல்லை கஸ்ரோவின்ரை மனசு போலை“

கஸ்ரோ குழந்தை போல் சிரிக்க ஆரம்பித்தார். இப்படியே சிரிப்புகளுடன் நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது, எனக்கு அந்தக் கடிதம் ஞாபகத்துக்கு வந்தது.

நான் வன்னிக்கு வெளிக்கிடும் பொழுது ஸ்ருட்கார்ட் என்ற நகரத்தில் இருந்த ஒரு தாய் கடிதம் ஒன்றை எனக்குத் தந்து அதை கஸ்ரோவிடம் சேர்த்து விடும்படி கேட்டிருந்தார். அந்தத் தாயின் மகன் ஒரு போராளி. அவரது இயக்கத்திற்கான பெயர் கவியுகன். மகன் இயக்கத்தில் இணைந்து சிறிது காலத்தில் அவனது பெற்றோர்கள் யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்து விட்டனர். யேர்மனிக்கு வந்த பின் அவர்களுக்கு அவர்கள் மகனுடனான தொடர்புகள் கிடைக்கவில்லை. எனவே தங்களது மகன் விடயமாக ஒரு கடிதம் எழுதி என்னிடம் தந்திருந்தார்கள்.

இப்பொழுது அந்தக் கடிதத்தை கஸ்ரோவிடம் கொடுத்தேன். உடனேயே பிரித்துப் படித்து விட்டுச் சொன்னார்.

„இஞ்சை ஒரு பெயரிலை கன போராளியள் இருப்பினம். நான் சரியா விசாரிச்சுப் போட்டு நீங்கள் யேர்மனிக்குப் போறதுக்குள்ளை உங்களுக்கு தகவல் தாறன்'

கடிதத்தைப் பத்திரமாக மடித்து தனது உதவியாளரைக் கூப்பிட்டுக் கொடுத்தார்.

வெண்புறாவில் எங்களுடைய செயற்பாட்டின் விபரங்களைக் கேட்டார். சொன்னேன். சோதனைச்சாவடியில் அந்த இளைஞனுக்கும் எனக்கும் இடையிலான ஊடலையும் அவரிடம் குறிப்பிட்டேன்.

„சமாதான ஒப்பந்தம் நடந்த உடனை சில வேலையளை உடனடியாகச் செய்ய வேண்டி இருந்தது. அதிலை செக்கிங் பொயின்றும் ஒண்டு. பீல்ட்டிலை போராடிக் கொண்டிருந்த ஆக்களைத்தான் நாங்கள் அங்கை போட்டிருக்கிறம். பீல்டிலை இருக்கிற போது அங்கை கதைக்கிற மாதிரி அவையள் இங்கையும் கதைக்கினம் போலை. கொஞ்சம் பழக்கி எடுக்கோணும். அடுத்தமுறை நீங்கள் வரக்கை கனக்க மாற்றம் இருக்கும்'

கஸ்ரோவின் பேச்சில் இருந்த உண்மை விளங்கியது.

„போராட்டத்திலை பாதிக்கப் பட்ட போராளியள் கனபேர் இங்கை இருக்கினம். என்னைப் போலை இடுப்புக்குக் கீழை இயங்காதவையள், கை, கால், கண் இழந்தவையள் எண்டு கனக்க... இதிலை கண் இழந்த போராளிகளுக்கு அறிவுத் தேடல் இருக்கு. இசை படிப்பு எண்டு அவையளுக்கு ஏதாவது செய்ய வேணும். உங்களாலை ஏதாவது செய்யேலுமோ எண்டு பாருங்கோ“ கஸ்ரோ என்னிடம் ஒரு வேண்டுகொளை விடுத்தார்.

„அவையளுக்கு என்ன வேணுமேண்டு சரியாத் தெரிஞ்சால் நாங்கள் யேர்மனி TRO வாலை ஏதாவது செய்யலாம்'

„அதுக்கு நீங்கள் அவையளை நேரை போய் சந்திச்சுக் கதைக்கிறதுதான் நல்லது. இஞ்சை பக்கத்திலைதான். நவம் அறிவுக் கூடம் எண்டு கேள்விப் பட்டிருப்பீங்கள். சிவா மாஸ்ரர்தான் பொறுப்பு. இதைப் பற்றிக் கதைக்கிறதுக்குத்தான் அவரையும் இண்டைக்கு இங்கை வரச் சொன்னனான்'

„நல்லது. நாங்கள் ஒருக்கால் சந்திப்போமே“

„நான் நாளைக்கு கொழும்புக்குப் போக வேண்டி இருக்குது. திரும்பி வாறதுக்கு சில நேரம் ஒரு கிழமையாவது செல்லலாம்“ சிவா மாஸ்ரர் அப்படிச் சொன்னதும், அவர் திரும்பி வரும் பொழுது அவரை சந்திக்க வாய்ப்பும் நேரமும் இல்லாமல் போய் விட்டால் என்ற கேள்வி எழ „நாளைக்கு நீங்கள் கொழும்புக்குப் போறதுக்கு முன்னாலை சந்திக்கிறதுக்கு ஏற்பாடு செய்யுங்களேன்“ என்றேன்.

„அதுவும் நல்லதுதான். நாளைக்கு பின்னேரம் ஆறு மணிக்கு உங்களாலை வரேலுமோ?“

„பின்னேரம் ஆறுமணி எண்டால் எப்பிடி கொழும்புக்குப் போவீங்கள்? செக்கிங் பொயின்ற் பூட்டிப் போடுவாங்களே?'

நான் அப்படிக் கேட்டது கஸ்ரோவுக்கும், சிவா மாஸ்ரருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்களுக்குள் வெளியே சொல்ல முடியாத விடயங்கள் சில இருக்கலாம். அவசரப் பட்டுக் கேட்டு விட்டேன்.

„அவர் கொழும்புக்குப் போறதுக்கு முன்னாலை ஒரு சந்திப்பு இருக்கு„ கஸ்ரோ பதில் தந்தார்.

„ஆறுமணிக்கு நீங்கள் வந்தால் நான் உங்களை அவையளுக்கு அறிமுகம் செய்திட்டு வெளிக்கிட்டிடுவன். நீங்கள் அவையளோடை நேரத்தைச் செலவழிக்கலாம்“

„கொல்கரையும், எனது மனைவியையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்“ என்றேன். மகிழ்ச்சியோடு சிவா மாஸ்ரர் ஒப்புதல் தந்து „வாகனம் அனுப்பி வைக்கிறேன்“ என்றார்.

நன்கு இருட்டி விட்டிருந்தது. தட்டில் இருந்த மெதுவடைகள் எல்லாம் சாப்பிட்டாயிற்று. கஸ்ரோவிடம் மகிழ்வான சந்திப்புக்கும், சுவையான பெரிய வடைக்கும் நன்றி சொல்லி மீண்டும் சந்திக்க வாய்ப்பிருக்கு என்று விடை பெற்றுக் கொண்டேன். வாகனம் வரை வந்து வழியனுப்பிய சிவா மாஸ்ரருக்கு நாளையும் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி வெண்புறா நோக்கிப் பயணமானேன்.

- (தொடர்ச்சி)

- மூனா 

Quelle - Ponguthamizh 

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை