நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24

மறுநாள் காலையில் செல்வா தனது உதவியாளருடன் வந்தாள். கொல்கர் தாமதங்களை ஏற்படுத்தாமல் கை பொருத்துவதற்கான வேலைகளை உடனேயே தொடங்கி விட்டான். ஸ்ராலின், கொல்கருக்கு உதவியாளராக நின்று உதவிகள் செய்து கொடுத்தான்.

செல்வாவின் கை வேலைகள் ஆரம்பித்த சில நிமிடங்களில் மருத்துவத் துறைப் பொறுப்பாளர் ரேகா வந்தார். நலன் விசாரிப்புகளுக்குப் பின்னர், தமிழ்ச்செல்வனுக்கு நேரம் கிடைக்கவில்லை அதனால் அவரால் வர முடியவில்லை என்ற தகவலைத் தந்தார்.

செல்வாவின் கை வேலைகளுக்கான தேவைகள் எல்லாம் ஒழுங்காக இருக்கின்றனவா என சரி பார்த்துக் கொண்டார். சிறிது நேரம் உரையாடி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.

அன்று மாலை கவிஞர் நாவண்ணன் வந்தார். கூடவே தனது மனைவியையும் இம்முறை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். தனக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஒன்று கூடி வந்திருப்பதாகச் சொன்னார்.

சென்ற முறை போல் நாவண்ணனுடன் அதிக நேரம் உரையாட முடியவில்லை. யேர்மனியில் சந்தித்துக் கொள்வோம் என்று அவர் விடை பெற்றுக் கொண்டார். நாவண்ணன் விடை பெறவும் ஜனனி வரவும் சரியாக இருந்தது.

எனது மகன் பிறந்த பொழுது வந்து அவனை பார்த்து பரிசும் தந்து போனவர், இன்று அவனது தோற்றத்தைக் கண்டு வியந்து சொன்னார். செஞ்சோலைக்கு என்று யேர்மனியில் இருந்து பல பொருட்களை நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். அவற்றை எல்லாம் பார்வையிட்டு தனது நன்றியைச் சொன்னார். அவற்றை எல்லாம் உடனடியாக எடுத்துச் செல்ல ஜனனிக்கு வாகன வசதி இல்லாததால் மறுநாள் நாங்களே வாகனம் ஏற்பாடு செய்து செஞ்சோலைக்கு கொண்டு வருகிறோம் என்றோம். மகிழ்ச்சியோடு வரச் சொன்னார். அடுத்தநாள் எங்களுக்கு நேரம் இருக்கப் போவதில்லை என்று அப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை.

ஜனனியுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே தமிழ்ச் செல்வனது வாகனம் வெண்புறாவுக்குள் நுளைந்தது. தமிழ்ச் செல்வன் நிறையவே களைத்திருந்தது தெரிந்தது. அவரது சிரிப்பு மட்டும் களைக்காமல் இருந்தது.

„எப்பிடி சுகமாக இருக்கிறீங்களோ?' என்ற நலன் விசாரிப்பில் ஆரம்பித்து உடன் வந்து சந்திக்க முடியாத சூழ்நிலையைச் சொன்னார்.

எனது மகன்களைப் பார்த்து, „உங்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கினமே?' என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

„எனக்கும்தான் ஆச்சரியமாக இருக்குது' என்றேன்.

தொடர்ந்து சிரித்தார்.

அவருக்கு நேரமே இல்லை. அரசியல் பேச்சு வார்த்தை, அதற்கான வெளிநாட்டுப் பயணங்கள், இராஜ தந்திரிகளுடான சந்திப்பு என பல வேலைகள் அவருக்கு முன்னால் பரவி இருந்தன. ஆனாலும் கிடைத்த சொற்ப நேரத்திலும் எங்களை நினைவு வைத்து சந்திக்க வந்ததற்கு நன்றி சொன்னோம்.

„இன்னும் ஓராளுக்கு நாளைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேணும்' என்றார்.

„யாருக்கு?'

„நாளைக்கு ஒரு பெரிய சந்திப்பு உங்களுக்கு இருக்கு' என்று சொல்லி விட்டு கண் சிமிட்டிச் சிரித்தார்.

மகிழ்ச்சியாகவும் அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்தது. பேச்சுவார்த்தை நேரம் இப்படியான சந்திப்பு ஒன்று சாத்தியப்படும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை.

இன்னும் ஒரு மகிழ்ச்சியை அடுத்து வந்த தமிழ்ச் செல்வனின் வார்த்தைகள் தந்தன.

„இந்தமுறை அவர் இருக்கிற இடத்திற்கு நீங்கள் போகத் தேவையில்லை. நீங்கள் இருக்கிற இடத்திற்கு அவர் வாறார்'

நம்ப முடியாமல் இருந்தது.

„நாளைக்கு மத்தியானம் அவரோடை சேர்ந்து சாப்பிடப் போறீங்கள். அரசியல்துறை கட்டிடத்திலை அதற்கான ஒழுங்கு செய்திருக்கு' தமிழ்ச் செல்வன் சொல்லும் பொழுது „நான்' அங்கே இல்லை எங்கேயோ சென்றிருந்தேன்.

தமிழ்ச் செல்வன் வந்து சந்தித்ததற்கும், இனிய செய்தி சொன்னதற்கும் நன்றி சொன்னோம்.

தமிழ்ச் செல்வன் சென்றதன் பின் ஜனனி சொன்னார், „ நாளைக்கு அண்ணனோடை உங்களுக்குச் சந்திப்பு இருக்குதெண்டால், நாளையிண்டைக்கு செஞ்சோலைக்கு வாங்கோவன்'

அவர் சொன்னதும் சரியாகத் தெரிந்தது.

செஞ்சோலைக்குப் போகவேண்டும். இனியவாழ்வு இல்லத்தில் செரோலியன் அமைப்பு தந்து விட்ட பொருட்களை சேர்ப்பிக்க வேண்டும். கஸ்ரோவைப் போய்ப் பார்க்க வேண்டும். நவம் அறிவுக் கூடத்திற்கான பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு நாட்கள் தேவைப்பட்டன. அதில் நாளைய பொழுது பிரபாகரனுடனான சந்திப்பு என்பதால் நீண்டதூரம் பயணம் செய்து மேற் சொன்ன எதையும் செய்ய விரும்பவில்லை. அதனால் நாளைய நாளைத் தவிர்த்துப் பார்த்தால் இரண்டு நாட்களில் இவை எல்லாம் சாத்தியமாகுமா என்ற அச்சம் எனக்குள் வந்து அட்டணக்கால் போட்டு அமர்ந்து கொண்டது.

சென்ற தடவை வந்திருந்த சமயம் பொழுது போகாமல் இருந்தது. இந்தத்தடவை பொழுது போதாமல் இருக்கிறது.

ஸ்ராலின் இம்முறை கொல்கருக்கு உதவியாக இருப்பதால், எனக்கான நேரங்களை நிலைமைகளுக்கு ஏற்ப என்னால் ஓரளவு சமாளிக்க வாய்ப்பிருந்தது. கொல்கரை வேலை செய்ய விட்டு விட்டு நான் மட்டும் வன்னியைச் சுற்றித் திரிவதும் சந்திப்புகளை மேற்கொள்வதும் கொஞ்சம் உள்ளுக்குள் துருத்தியது.

செல்வாவின் கை பொருத்துவது முக்கியமானது. அதை கொல்கர்தான் செய்ய வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

கொல்கர் சொன்னான் ' நாட்கள் போதாது. கை போடும் வேலையை நான் பார்க்கிறேன். நீ உனது மகன்களையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய். நேரத்தை உனக்கு ஏற்றவாறு பயன் படுத்திக்கொள்.“ என்று.

நாளைய சந்திப்பை அவனுக்குச் சொன்னேன். „கை பொருத்தும் வேலைக்கு சில மணித்தியாலங்கள் ஓய்வு கொடு“ என்றேன்.

„மகிழ்ச்சி“ என்றான்.

நாளைய சந்திப்பை வெண்புறா உறவுகளுக்கும் சேர்த்து பயன்படுத்த அன்ரனிக்கு விருப்பம் இருந்தது. அதை அவர் தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவிக்க, நாளைய சந்திப்பில் வெண்புறா உறவுகள் அனைவருக்கும் மதிய உணவு அரசியல்துறை அலுவலகத்தில் என்று ஏற்பாடாகியது.

இந்த முடிவால் வெண்புறா நிறுவனத்தில் ஆராவாரத்துக்கு அளவே இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் இது அவர்களது சேவைக்கான அங்கீகாரம். ஒரு கால் இழந்தவனுக்குத்தான் நன்கு தெரியும், அதன் வலியும் மறு காலின் தேவையும். அதனால்தான் அதீத ஈடுபாடுகளோடு அவர்களால் சேவை செய்ய முடிகிறது. நாளைய சந்திப்பானது அவர்களுக்கு விருந்தோடு கூடிய ஒரு விருது.

வெண்புறா நிலையத்தில் இருந்து ஒரு நடை போட்டு வரக் கூடிய தூரத்தில்தான் அரசியல்துறை இருந்தது. ஆனாலும் மரியாதையாக எங்களை அழைத்துப் போக வாகனம் வந்தது.

வெண்புறா உறவுகள் அரசியல்துறைக்கு வருவதற்கான ஒழுங்குகளை தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

மதிய நேரத்தில் அரசியல்துறை அலுவலகத்தின் வராந்தாவில் இருந்து தமிழ்ச் செல்வனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வரவேண்டியவரை மட்டும்தான் காணவில்லை.

„என்ன ஆளை இன்னும் காணேல்லை?' என்று தமிழ்ச் செல்வனைக் கேட்பது அழகாக இருக்காது. அவராக அது பற்றி ஏதாவது சொன்னால்தான் உண்டு.

எனது மனதில் இருந்ததை தமிழ்ச் செல்வன் எப்படிப் படித்துக் கொண்டார் என்று தெரியவில்லை.

„கொஞ்சம் தாமதமாகும். உங்களுக்குப் பிரச்சினை இல்லைத்தானே?“ சிரித்துக் கொண்டே பேசத் தெரிந்தவரிடம் பிரச்சனை இருந்தாலும் சொல்ல வாய்ப்பே இல்லைத்தானே.

„கொஞ்சம் என்ன அதிக நேரம் எண்டாலும் காத்திருக்கிறோம். மதியச் சாப்பாட்டை இரவுச் சாப்பாட்டோடை சேர்த்து எடுத்துக் கொள்ளுவம்“

„அவ்வளவு நேரம் செல்லாது. பேச்சுவார்த்தைக் குழுவை சந்திக்கிற வேலையும் அவருக்கு இண்டைக்கு இருக்கு“

தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அரசியல்துறை அலுவலகலத்துக்குள் வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது.

- (தொடர்ச்சி)

- மூனா     

Quelle - Ponguthamizh   

நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை