நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

எழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன்.

முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார்.

கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை.

கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது.

கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது.

„கடலில் சிறீலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா?“ என்று சூசையிடம் கேட்டேன்.

கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்து விட்டது.

„அவங்கடை கப்பலை நோக்கி விடு“ சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார்.

„சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே“ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறீலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள்.

„சரி திருப்பு“ சூசை அறிவித்தார்.

எங்களைப் பார்த்துக் கேட்டார். „பயந்திட்டீங்களோ? ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட அளவு மெயின்ரெயின் பண்ணோணும். நாங்கள் நெருங்கிப் போனதாலை சத்தவெடி போட்டு ஒரு சமிக்கை காட்டுகினம். அவ்வளவுதான்.“

எதுவானாலும் கப்பல் கரையை நோக்கித் திரும்பியதில் எனக்கு நிம்மதியானது.

„நாங்கள் கடலிலை இருந்து தொடர்ந்து அடிச்சுக் கொண்டிருந்தம். அவங்கள் கரையிலை இருப்பெடுத்து வைச்சு கொண்டு விடாமல் அடிச்சுக் கொண்டிருந்தாங்கள். பார்த்தன் சரிவரேல்லை. கடைசியா சொன்னன். அடிச்சுக் கொண்டே போங்கோ , எஞ்சினை நிப்பாட்டாதையுங்கோ எண்டு. தண்ணியிலை இருந்து போட்டுகள் எல்லாம் அடிச்சபடி பாஞ்சு போய் அதோ அவ்வளவு தூரம் தரையிலை போய் தரை தட்டி நிண்டுதுகள். போட்டுகள் பாஞ்ச வேகத்திலை பயந்து ஓடிட்டாங்கள்..“ கடற்கரையில் நின்று `முல்லை வெற்றிச்சமரில்´ போராடிய முறையை சூசை விளக்கிச் சொன்ன விதமே தனி.

கஸ்ரோவைச் சந்திக்க வேண்டிய தேவையைச் சூசையிடம் சொன்னேன்.

„நல்ல கதையா இருக்கு. என்னட்டை வந்திட்டு சாப்பிடாமல் போறதோ? கஸ்ரோவிட்டை நாளைக்குப் போய்ச் சாப்பிடுங்கோ“ சொன்னது மட்டுமல்லாமல், நாளைதான் நாங்கள் வந்து சந்திப்போம் என கஸ்ரோவுக்கு தகவல் கொடுத்து விடும்படி தனது உதவியாளருக்குச் சொன்னார்.

இரவுச் சாப்பாடு கடலுணவுகளாக இருந்தன. கொல்கர் இந்த உணவை தவற விட்டு விட்டானே என்ற உறுத்தல் மனதில் இருந்தாலும் எனது நாவும், வயிறும் மிகமிக பேருவகை கொண்டிருந்தன.

இரவு உணவுக்குப் பின்னரும் சூசையுடன் நீண்ட நேரம் உரையாட முடிந்தது. அடுத்த நாள் விடியலுக்கு கொஞ்சம் முன்பாக வெண்புறா வந்து சேர்ந்தோம். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக கஸ்ரோவைத் தொடர்பு கொண்டு நேற்று வரமுடியாத நிர்பந்தத்தை அவரிடம் சொன்னேன். அன்றே தன்னிடம் வரும்படி கஸ்ரோ அழைத்தார்.

மறுநாள் யேர்மனிக்கு மீண்டும் பயணம். கஸ்ரோவிடம் சென்று வர நேரமாகி விடும் என்பதால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் எல்லோரையும் சென்று சந்தித்து விடை பெற்றுக் கொண்டேன்.

கொல்கர் செல்வாவிற்கு கைக்கான பயிற்சியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

முதல்நாள் பயணித்த வாகனத்தையே வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கஸ்ரோவிடம் சென்றோம்.

„நேற்று ஏமாத்திப் போட்டீங்கள்“ கஸ்ரோவின் பேச்சில் கவலை தெரிந்தது.

„சாப்பாடெல்லாம் செய்தாப் போலைதான் சூசையிட்டை இருந்து தகவல் வந்தது. உங்களுக்குப் பிடிக்கும் எண்டு பெரிய்ய்ய்ய வடை எல்லாம் சுட்டு வைச்சிருந்தம்“

„எல்லாம் வீணாப் போயிற்றா?'

„எங்கை வீணாகிறது? நாங்களே சாப்பிட்டிட்டம்“

„எங்கள் பெயரில் உங்களுக்கு மகா விருந்து“

கஸ்ரோ சிரித்துக் கொண்டார். „வடை இல்லை எண்டு கவலைப் படாதையுங்கோ. வந்து கொண்டிருக்குது“ என்று நாவூற வைத்தார்.

இம்முறை எனது மனைவியும் பிள்ளைகளும் கூட இருந்ததால் பலதையும் கஸ்ரோவிடம் கதைக்க முடிந்தது. சென்றமுறையை விட நீண்ட நேரம் எங்களது உரையாடல்கள் தொடர்ந்தன.

அவர் எழுதிய புத்தகத்தில் கையெழுத்துப் போட்டு எனது மனைவிக்குப் பரிசாகக் கொடுத்தார். „மீண்டும் கட்டாயம் வரவேண்டும்“ வலியுறுத்திச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

மறுநாள் காலையில் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்தாகி விட்டன.

செல்வாவிற்கான கையில் ஏதோ சில வேலைகள் இருக்கிறது. அதை மீண்டும் யேர்மனிக்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும் என்று கொல்கர் சொன்னான்.

„அடுத்தமுறை நீ வரும் பொழுது உன்னுடன் நான் வர வேண்டிய தேவை இருக்காது. ஸ்ராலின் உனக்கு துணை நிற்பான்“ என்றேன்.

வெண்புறா உறவுகளிடம் விடை பெற்றுக் கொண்டோம். கொழும்பு செல்ல வாகன வசதி செய்து தந்திருந்தார்கள். இடையில் சோதனைகள், இடைநிறுத்தல்கள் எதுவும் இல்லாமல் பயணம் சுலபமாகவும், சுகமாகவும் இருந்தது.

கொழும்பு நோக்கிய பயணத்தின் போது, லண்டன் தொழில் நுட்பத்தில் வெண்புறாவில் நடந்த பட்டறை பற்றி கொல்கரிடம் சொன்னேன். வெண்புறாவில் அங்கிருந்தவர்கள் தனக்கு அதை தெரியப் படுத்தியதாகச் சொன்னான்.

அது விடயமான எதுவிதமான மேலதிக விமர்சனங்களையையும் அவன் தரவில்லை. „செல்வாவின் கை வேலையை முடி. காலம் ஒருநாள் உன்னை மீண்டும் அழைக்கும். அதுவரை ஸ்ராலினுக்கு உனது நிறுவனத்தில் தொடர்ந்து பயிற்சி கொடு“ என்றேன்.

புன்னகையோடு சம்மதித்தான்.

பின்னாளில் வந்த சுனாமி அலைகளில் அரசியல் புயல்களில் போராட்ட அனர்த்தங்களில் எங்களின் சேவையும் புதைந்து போயிற்று. எந்தவித அரசசார்பற்ற நிறுவனமும் வடக்கு கிழக்கில் செயற்பட அனுமதி இல்லை என்று அழித்தவர்களே ஆணையிட்டுச் சொன்னார்கள். அச்சுறுத்தி நின்றார்கள்.

எதுவுமே செய்ய வாய்ப்பில்லை.

வலிகளைச் சுமந்தே வாழ்க்கைகள் தொடர்கின்றன. தேவைகள் அங்கே நிறைய இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் வல்லமைகள் இங்கே தனியாகப் பரந்து வீணே கிடக்கின்றன.

புலம் பெயர் நாடுகளில் வெவ்வேறு துறைகளில் எங்கள் இளைய சந்ததிகள் தங்கள் ஆற்றல்களை, அறிவுகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து நாட்டுக்குத் தேவையான விடயங்கள் எடுத்துச் செல்லப்பட்டால் சோர்ந்திருக்கும் மனங்கள் எல்லாம் அங்கே துளிர்விடத் தொடங்கி விடும்.

எங்கள் நாட்டுக்கான பொதுப் பணியில் தனி ஒருவராக பெரிதாக சாதிக்க வாய்ப்புகள் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

பிறந்தநாள், திருமணநாள் அல்லது எங்களது ஏதாவது ஒரு நினைவு நாளில் அங்கிருக்கும் இல்லத்தில் ஒருநாள் உணவழிப்பது எங்கள் மனதுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் பாதிப்புக்குள்ளான நமது உறவுகள் யாரிலும் தங்கியிராது சுயமாகச் சம்பாதித்து வாழ்வதற்கான வழிவகைகளை கண்டறிந்து அதை ஏற்படுத்துவோமாயின் அது சமுதாயத்திற்கான உயர்ச்சியைத் தரும்.

`அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு´ என்று இரண்டாம் வகுப்பில் படித்ததை ஏனோ மறந்து விட்டோம். சிதறி இருந்து சேவை செய்பவர்கள் எல்லாம் சேர்ந்து வரவேண்டும்.

அதுவும் தன்னலம் இல்லாமல் நீ, நான் என்று வேறுபாடு இல்லாமல் மனிதாபிமான சேவை மனத்தோடு தொண்டு செய்வோமாயின் நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்.

சொல்ல மறந்து விட்டேன். பல வருடங்களாக கொல்கரைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அவன் ஞாபகம் வந்த பொழுது இப்பொழுது அவன் என்ன செய்கிறான் என்று தேடிப் பார்த்தேன். கையிற்றி (Haiti)யில் பூகம்ப அனர்த்தங்களில் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்திக் கொண்டிருக்கும் அவனது படம் ஒன்று இணையத்தில் காணக் கிடைத்தது.

- (நிறைவு)

- மூனா 

Quelle - Ponguthamizh   


நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 20
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27

Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை