மூணே மூணு கிலோ

கணேசனுக்கு எம்.ஜி.ஆர் என்றாலே போதும். நாளெல்லாம் அவர் படங்களைப் பற்றி, அவரது படப் பாடல்களைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பான். ஒரு தடவை என்னிடம் கேட்டான் 'இந்தியாவுக்குப் போவோமா?' என்று

'போய்...? '

'எம்.ஜி.ஆரை பார்த்திட்டு வரலாம். '

'செலவுக்கு? '

'நான் தாறன்.. இஞ்சையிருந்து சிப் கொண்டு போனால் அங்கை ஒன்றுக்கு இரண்டாக விக்கலாம் வரக்கை அங்கையிருந்து பட்டுச்சாறி வாங்கிக் கொண்டு வந்தால் இஞ்சை நல்ல விலைக்கு குடுக்கலாம். வாற காசுலை பயணச் செலவை முடிச்சுப் போடலாம். அப்பிடி.. இப்பிடி ஏதாவது கையைக் கடிச்சால் அதை நான் ஏற்கிறன்..'

கரும்பும் தந்து தின்பதற்கு கூலியும் தந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்.

அவன் திட்டப்படியே ராமானுஜம் கப்பல் மூலமாக ராமேஸ்வரம் போய், திருச்சி சென்று அங்கிருந்து சென்னை வந்தோம். ஹொட்டல் எடுத்து தங்கிக் கொண்டோம்.

ஹொட்டலில் தங்கியிருந்த பொழுதெல்லாம் அதிகமாக அவன் முணுமுணுத்த பாடல், அரசகட்டளை திரைப்படத்தில் இடம் பெற்ற „எத்தனை காலம் தவமிருந்தேன் உன்னை காண்பதற்கு..' என்ற பாடல்

புரட்சி நடிகர் இப்பொழுது புரட்சித் தலைவராக கோட்டையிலே இருந்தார். முன்னராவது எங்காவது ஒரு பட சூட்டிங்கில் அவரைப் பார்க்க வாய்ப்பிருந்தது. இப்பொழுது சட்டசபைக்கா போக முடியும். சினிமாத் தியேட்டர்கள் கடை வீதிகள் என எங்கள் பொழுதுகள் போனதே தவிர எம்.ஜி.ஆரை பார்க்கும் வழி மட்டும் தெரியாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் நித்திரைக்குப் போகும் பொழுது கணேசன் சொல்லுவான், „இண்டையப் பொழுதும் வீணாப் போட்டுது. வரவர நாள் குறைஞ்சு கொண்டு போகுது' என்று

ஒருநாள் வீதியில் போய்க் கொண்டிருக்கும் பொழுது எம்.ஜி.ஆரை பார்க்க வழி பிறந்தது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் என்று ஒரு சுவரொட்டி எங்களுக்குச் சேதி சொன்னது. அது எதற்கான கூட்டம் என்று நினைவு இல்லை. காமராஜர் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டமாக இருக்க வேண்டும். இடம் நேரம் போன்ற தகவல்களை சுவரொட்டியில் இருந்து எடுத்துக் கொண்டோம்.

சென்னையில் நாலு வீதிகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கூட்டம் எற்பாடாகி இருந்தது. முதல் வரிசையில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். யார் யாரோ எல்லாம் பேசினார்கள். கணேசன் அடிக்கடி சிரித்துக் கொண்டான். நகைச்சுவையாக யாரும் பேசவில்லையே எதுக்கு சிரிக்கிறான்? அவனையே கேட்டேன். „எம்.ஜி.ஆர் என்னைப் பார்க்கிறார் என்றான்'

கறுப்புக் கண்ணாடியூடாக அவர் எங்கே பார்க்கிறார் என்று யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை. அவரது உடன் பிறப்புகள் அவர் தன்னைத்தான் பார்க்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பார்கள். அதில் கணேசனும் ஒருத்தன்.

எம்.ஜி.ஆர் பேசும் நேரம் வந்தது. கரகரத்த குரலில் பாசத்தோடு சொன்னார் „என் ரத்தத்தின் ரத்தங்களான உடன் பிறப்புக்களே...' எனது அருகில் இருந்த பாசமிகு உடன் பிறப்புக்கள் சந்தோச மிகுதியால் இருக்கையை விட்டு எழுந்து பிளாஸ்ரிக் கதிரையை மேலே வானத்தில் எறிந்து மீண்டும் பிடித்து ஆரவாரம் செய்தார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. கதிரைகள் என் மேல் விழுந்து விடுமோ என என்னுடைய தலையை இரு கைகளாலும் மூடிக் கொண்டு எதுக்கு முன் வரிசையை தேடிப் போனேன் என்று நொந்து கொண்டேன்.

ஒரு வழியாக கணேசின் ஆசை நிறைவேறியது.

நாட்டுக்குத் திரும்பும் போது மதுரை போய் அங்கு தங்கி, அங்கு கோயில், குளங்கள் என்று பார்த்துவிட்டு, ராமேஸ்வரம் போவதாகத் தீர்மானித்துக் கொண்டு மதுரை வந்தோம். எல்லாம் முடிந்து ராமேஸ்வரத்திற்குப் புறப்படும் நாள் வந்தது.

பெட்டிகளுடன் ரயில் நிலையத்திற்கு வந்தோம்.'சாரு ராமேஸ்வரமா?' கேட்டது ரயில் நிலைய அலுவலகர்.'லக்கேஜ் முப்பது கிலோவுக்கு மேலை எண்டால் சார்ஜ் பண்ணனும்..'

'முப்பது கிலோ வராது.. 'கணேஸ் சொன்னான்.

'நெறுத்துப் பாக்கணும்..'

நேரம் குறைவாக இருந்தது. நிலமையைப் புரிந்து கொண்ட அலுவலகர், 'சரிசரி.. நெறுக்க வேணாம். நான் முப்பது என்றே எழுதி விடுறன்.' படிவங்களை நிரப்பி கைகளில் தந்து விட்டு அலுவலகர் சென்று விட்டார். நாங்களும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறிக்கொண்டோம்.

காலையில் ராமேஸ்வரம் வந்து விட்டோம். இனி கப்பல் புறப்படும் இடத்திற்குப் போக வேண்டும்.

நாங்கள் வந்த ரயிலில் இருந்து இறங்கிய ஒரு குடும்பத்தைப் பார்த்து கணேசன் சொன்னான். „பார். முப்பது கிலோதான் கொண்டு போறதுக்கு எலவுட். அவையள் முன்னூறு கிலோவுக்குக் கிட்ட கொண்டு வருயினம் போல இருக்கு. விசயம் தெரியாமல் கொண்டு வருயினம். மாட்டுப் படப் போயினம்'

பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ரயில் நிலையத்துக்கு வெளியே வர முற்பட்ட போது, ஒரு அதிகாரி குறுக்கே வந்து நின்றார். அவர் கேட்டதை எல்லாம் காட்டினோம். 'எடை அதிகமாக இருக்கும் போலை. ஏய் இங்கை வா.. இதை நெறுத்துப் பாரு.. 'அருகில் இருந்த ஊழியருக்கு கட்டளை போனது. நெறுத்துப் பார்த்து விட்டு அவர் சொன்னார்,

'27 கிலோ சாரு'

'இதிலை முப்பது என்று போட்டிருக்கே.. 'அதிகாரி முகத்தைச் சுழித்தார். பிறகு எங்களை நோக்கி, 'மூணு கிலோ என்னாச்சு..? 'எனக்குப் புரிந்தது. வில்லங்கம் ஒன்று இருக்கிறதென்று.

கணேஸ் சொன்னான், 'வழியிலை சாப்பிட்டம்.'

'மூணு கிலோவையுமா சாப்பிட்டீங்க..? நம்ப முடியாது..'

'குறிப்பிட்ட எடையை விட அதிகமாக இருந்தால் தானே பிழை. இது குறைவாகத்தானே இருக்கு..' நான் கேட்டேன்.

'நீ சும்மாயிரு... அவன் சாப்பிட்டான் என்று சொல்லுறான்.. அது என்னண்டு எனக்குத் தெரியணும்.. 'சொல்லிவிட்டு பெட்டியை இழுக்க முடியாமல் இழுத்துக் கொண்டு வந்த அந்த குடும்பத்தை நோக்கிப் போனார்.

என்னடா இது. பேசாமல் பெட்டியை மதுரையிலையே நெறுத்துக் கொண்டு வந்திருக்கலாமோ..? கணேசனைக் கேட்டேன்.

„சும்மாயிரு. கூடக் கொண்டு போனால்தானே பிழை. முப்பது கிலோவுக்கு குறையத்தானே இருக்கு. சும்மா வெருட்டுவாங்கள். இதுக்கெல்லாம் நான் பயப்பிடமாட்டன். நான் எம்ஜிஆர் ரசிகனாக்கும்' கணேஸ் வீறாப்பாகச் சொன்னான்.

எம்ஜிஆர் ஆட்சிதானே நடக்கிறது. கணேஸ் அவரது ரசிகனாச்சே. அவன் நம்பிக்கையோடு இருந்தான்.

எங்கள் பெட்டியை நெறுத்துப் பார்த்த ஊழியர் கிட்ட வந்து காதுக்குள் சொன்னார். 'சாரு.. பேசாமல் ஐம்பதோ.. நூறோ தள்ளிட்டு போ சாரு.. இப்பிடியே நின்னியின்னா.. கப்பல் போயிடும்.. இன்னைக்குப் போற கப்பல் நாளைக்குத்தான் வரும். நாளைக்கு மறுநாள்தான் பயணம் போகலாம். அப்புறம்.. லாஜ்ஜிலைதான் தங்கணும்.. அதுக்கு வேறையா காசு அழணும்..'

கணேஸ் என்னைப் பார்த்தான். நான் கணேஸைப் பார்த்தேன்.

'அந்தா பாத்தியா?' ஊழியர் காட்டிய இடத்தைப் பார்த்தோம். அந்தக் குடும்பம் ரயில் நிலையத்துக்கு வெளியே பெட்டியை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது.

'பாத்தியா.. அவங்களுக்கு அநுபவமிருக்கு.. கொடுக்கிறதைக் கொடுத்திட்டு பிரச்சினையில்லாமல் போறாங்கள் பாத்தியா..? இப்பிடியே நின்னுக் கிட்டிருந்தால் அப்புறம் தூண் துரும்பு எல்லாம் காசு கேக்கும் ஆமா.. '

எம்ஜிஆர் ஆட்சியிலே கையூட்டா? கணேஸ் முரண்டு பிடித்தான்.

„ஒருநாள் முன்னர் இஞ்சை வந்திருந்தால் நின்று வாதாடலாம். கப்பலைப் பிடிக்கிறதுக்கான கடைசி நேரம் வந்திருக்கிறம். எங்கள் அவசரம் அவையளுக்கு நல்லாத் தெரியும். வேற வழியில்லை கணேஸ்'

கணேஸ் ஐம்பதை எடுத்து அவன் கையில் வைத்து 'இதைக் கொண்டு போய் அவரிட்டை குடு' என்றான்.

'அவருக்குச் சரி.. எனக்கு..?'

'இது என்னடா பகற் கொள்ளையா இருக்கு.. ' கணேஸ் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான்.

சற்றுத் தள்ளி நின்ற அதிகாரி அடிக்கடி எங்களைப் பார்த்துக் கொண்டான். நேரம் போனால் கப்பலுக்குச் செல்வதற்கு வண்டியும் கிடைக்காமல் போகலாம். இந்தா வேண்டா வெறுப்பாக இன்னுமொரு தாளை அவன் கையில் திணித்து விட்டு நடந்தோம்.

கணேஸின் பாரத்தாலோ என்னவோ குதிரை வண்டி மெதுவாகவே நகர்ந்தது. „குதிரைக்குச் சாப்பாடு போடுறதேயில்லையா?' என வண்டிக்காரனை அடிக்கடி நொந்து கொண்டான். கணேஸ் நிறைய எரிச்சலில் இருக்கிறான் என்பது புரிந்தது.

கப்பலில் பயணிக்கும் போது எம்.ஜி.ஆர் படப் பாடல்களையே கணேஸ் முணுமுணுத்துக் கொண்டு வந்தான். ஒரு கட்டத்தில் என்ன நினைத்தானோ தெரியாது, „குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா..' என்று சத்தமாகப் பாட ஆரம்பித்துவிட்டான்.

- மூனா
6.11.2015

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை