நாலும் தெரிந்தவன்

இப்பொழுதெல்லாம் அடிக்கடி சிதம்பரநாதனை நினைத்துக் கொள்கிறேன்.

ஸ்ரெதஸ்கோப் வடிவில் வயர்கள் காதில் இருந்து இறங்கி கைத்தொலைபேசியுடன் இணைந்திருக்கும் நிலை இல்லை என்றால், தனியாக நின்று கதைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் அச்சொட்டாக சிதம்பரநாதனுடன் பொருந்தி விடுகிறார்கள்.

எழுபதுகளில் எனது அண்ணன் நிறுவிய புத்தகக் கடை நகரத்தின் மையத்தில் இருந்தது. நான் அதிகமான புத்தகங்கள் வாசித்தது அப்பொழுதுதான். கடையில் அண்ணனுக்கு உதவியாக இருந்தேன். சிலவேளைகளில் உபத்திரமும் தந்தேன் என்பதை பின்னர் விளங்கிக் கொண்டேன்.

அந்தக் கடையில் இருந்த பொழுதுதான் சிதம்பரநாதனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. குளித்து சுத்தமாக உடையணிந்து மடித்துக் கட்டிய சாரத்துடன் காலை எட்டு மணிக்கெல்லாம் நகரத்துக்கு வந்து விடுவார். காலை எட்டு மணிக்குப் பிறகு நகரம் முழுவதும் அவருக்கே சொந்தம். நகரத்தை நடை போட்டு அளந்து கொண்டிருப்பார். திடீரென நிற்பார். கைகளை காற்றில் துளாவி பஞ்ச பூதங்களில் நீர், நெருப்பு தவிர்ந்த நிலம், காற்று, ஆகாயம் ஆகிய மூன்றோடும் நிறையவே கதைப்பார். என்னதான் கதைக்கிறார் என்று கிட்டே போனால் கோவித்துக் கொண்டு தள்ளிப் போய் நிற்பார். இதனால் யாருமே அவருக்கு இடைஞ்சல்கள் தருவதில்லை. அவர் தனது தனியான உலகத்தில் சுதந்திரமாக, சந்தோசமாக இருப்பார்.

சிதம்பரநாதனின் ஊர் வியாபாரிமூலை என்று சொல்லிக் கொண்டார்கள். அவருக்கு எதனால் இப்படி ஆனது என்று தெரியவில்லை. வேலைப் பிரச்சனையா? காதலில் தோல்வியா இல்லை கலியாணம் செய்ததால் இப்படி ஆனதா தெரியவில்லை. ஆரம்பத்தில் என்னைக் கண்டால் விலகிப் போவார். சில நாட்களில் எனது முகம் அவருக்கு பரீட்சயம் ஆகிப் போனது. அவரைக் கடந்து போனால் என்னை உற்றுப் பார்ப்பார். சில சமயங்களில் தூர நின்று கடையை நோட்டம் விடுவார். நகரத்தில் அவர் வலம் வரும் பொழுதெல்லாம் எங்கள் கடையை நோட்டம் விட்டுக் கொண்டே போவார். திடீரென ஒருநாள் கடைக்குள் வந்து நின்றார். கையை நீட்டினார். „காசு குடு' அப்பொழுதுதான் அவரது குரலை முதன் முதலாகக் கேட்கிறேன். குரல் உரிமைக் குரலாக இருந்தது.

ஐந்து ரூபாவை எடுத்து அவர் கையில் வைத்தேன். வேகமாக அதை எடுத்து மேசையில் போட்டார். இரண்டு ரூபா, ஒரு ரூபா என அவர் கையில் வைத்த பொழுதும் அதே நிலைதான். எவ்வளவு என்னிடம் எதிர்பார்க்கிறார் என்பதை அறிய முடியாமல் இருந்தது. நூறு ரூபா தாளை எடுத்து அவரது கையில் வைத்தேன் அப்பொழுதும் அதே நிலைதான். ஆக ஒரு ரூபாவிற்கு குறைவாகத்தான் எதிர்பார்க்கிறார் என்பது விளங்கியது. ஐம்பது சதத்தை எடுத்து அவரது கையில் வைத்தேன். காசை எடுத்து இரண்டு பக்கங்களையும் திருப்பித் திருப்பி பார்த்து விட்டு காதில் சொருகிக் கொண்டு வேகமாகப் போய் விட்டார்.

பின்னர் அதுவே வாடிக்கையாகிப் போனது. எந்த நேரம் என்றில்லை ஒவ்வொரு நாளும் சிதம்பரநாதன் எங்கள் கடைக்கு சமூகமளிப்பார். கையை நீட்டுவார். அவரது கையில் ஐம்பது சதத்தை வைப்போம். போய் விடுவார். எப்போதாவது மதிய நேரம் வருவார். „சாப்பாடு வாங்கித்தா' என்று விட்டு நடக்க ஆரம்பித்து விடுவார். அவர் பின்னாலேயே போக வேண்டும். சபாஸ் கபேயா? லக்சுமி பவானா? புஹாரி ஹொட்டலா அதை அவர்தான் தெரிவு செய்வார். அவர் எந்தக் கடையில் போய் நிற்கிறாரோ அங்கே அவருக்கான சாப்பாட்டுக்கான பணத்தை செலுத்தி விட்டு வருவேன்.

சிதம்பரநாதனைப் பற்றிச் சொல்லும் பொழுது ஜிவியைப் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். நவீன சந்தைக் கட்டிடத்தில் அமைந்திருந்த ஒலிபரப்புக் கூடத்திற்கு ஜிவிதான் பொறுப்பு. அந்த ஒலிபரப்பினூடாக கடை விளம்பரங்களைனச் செய்து கொண்டிருந்தான். சந்தை இரைச்சல் வாகனச் சத்தங்கள் நடுவே அவனது ஒலிபரப்பு சிவனே என்று தன்பாட்டிற்குப் போய்க் கொண்டிருக்கும். நிறையத் தடவைகள் அவன் கேட்டுக் கொண்டதால் எங்கள் கடை விளம்பரமும் அவனது ஒலிபரப்பில் இருந்தது. அதனால் அவனுடன் ஏற்பட்ட சிறு பழக்கம் அவனுடன் கடைக்குப் போய் சேர்ந்து இருந்து தேனீர் அருந்துவது வரை வந்து விட்டது.

ஜிவிக்கு போர் அடிக்கும் பொழுதெல்லாம் பதிவு செய்த கசெற்றை ஒலிக்க விட்டு விட்டு எங்கள் கடைக்கு வந்து விடுவான். ஒருநாள் என் அண்ணன் என்னிடம் சொன்னார், „சினேகிதத்தை கடைக்கு வெளியிலை வைச்சுக் கொள். வியாபாரத்துக்கு அழகில்லை. அதுவும் பள்ளிக்கூடம் விடுற நேரம் பொம்பிளைப் பிள்ளைகள் வாற பொழுது ஜிவி இங்கை வந்து இருக்கிறது எனக்கு நல்லதாத் தெரியேல்லை'

அண்ணன் அப்படிச் சொன்ன பிறகே கூர்ந்து கவனித்தேன். பாடசாலை விடும் நேரத்தில் தவறாமல் ஜிவி கடைக்குள் வந்து அமர்ந்து கொள்வான். அவன் பதிவு செய்து அந்த நேரத்தில் அவன் ஒலிக்கவிட்ட பாடல்கள் எல்லாம் காதலைப் பேசின. நாங்கள் வியாபார மும்மரத்தில் இருக்கும் பொழுது அவனது கண்கள் கண்கொத்திப் பாம்பாக மாறி இருந்தன. அண்ணனின் சொல் சரியாகவே இருந்தது.

ஜிவியின் மனது நோகாமல் பக்குவமாகச் சொல்லிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். லாலா கடை கொத்து றொட்டி சுவையானது. இரவு அவனையும் கூட்டிக் கொண்டு போய் கொத்து றொட்டியோடு சொல்லுவதையும் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கணக்குப் போட்டேன்.

„ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுது அலை பாயுது மனம் ஏங்குது ...' ஜிவியின் ஒலிபரப்புக் கூடத்தில் இருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஜிவி எங்கள் கடைக்குள் இருந்தான். கடையில் பாடசாலை மாணவ மாணவிகள் கூட்டம். அந்தக் கூட்டம் அரை மணித்தியாலத்துக்குள் கலைந்து விடும். பஸ்ஸைப் பிடிப்பதற்கும், மாலை வகுப்புகளுக்குப் போவதற்குமே அவர்களுக்கு நேரம் போதாது. அந்த அரை மணித்தியாலங்களுக்குள்ளேயே வியாபாரம் சில ஆயிரங்கள் ஆகிவிடும். சுழன்று கொண்டிருந்தோம். திடீரென கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒருவர் ஜிவிக்கு முன்னால் வந்து நின்றார். அது எங்கள் சிதம்பரநாதன். வழக்கம் போல் அவரது கை ஐம்பது சதத்துக்காக நீளவில்லை.

„எப்ப வந்தனீ?' ஜிவியைப் பார்த்து சிதம்பரநாதன் அப்படிக் கேட்ட பொழுது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சிதம்பரநாதனின் குரலை அப்பொழுதுதான் அங்கிருந்த பலர் முதல்தடவையாகக் கேட்கிறார்கள்.v சிதம்பரநாதனும் விடாமல் ஜிவியைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஜிவி விழிபிதுங்கி நின்றான்.

„உன்னை எப்ப விட்டவையள்?' சிதம்பரநாதனின் இந்தக் கேள்வியால் ஜிவி ஆடிப்போனான். சிதம்பரநானின் அடுத்த கேள்வியால் ஜிவி ஒடுங்கிப் போனான். அந்தக் கேள்வி „உனக்கு இப்ப சுகமாயிற்றே?' கேட்டதோடு மட்டுமல்லாமல் ஜிவியின் தலையைக் காட்டி அந்தக் கேள்வி கேட்டதே ஜிவி ஒடுங்கிப் போனதுக்கு காரணம்.

சிதம்பரநாதன் நகரத்தில் தனியாக நின்று கதைப்பது எல்லோரும் அறிந்ததே. அவர் ஜிவியிடம் கேட்ட கேள்வியால் அங்கிருந்தவர்களின் பார்க்கும் பொருளாக ஜிவி மாறிப்போனான். தன்னைப்பார்த்து அம்பிகைகள் புன்னகைக்க மாட்டார்களா என்று காதல் கீதங்கள் ஒலிக்க விட்டு காத்து நின்றவனைப் பார்த்து கேலியாக எல்லோரும் சிரித்ததால் ஜிவியால் மேற்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. கடையை விட்டு வேகமாக வெளியேறினான். அவனைத் தொடர்ந்த சிதம்பரநாதன், „ எப்ப வந்தனீ? உன்னை எப்ப விட்டவையள்? உனக்கு இப்ப சுகமாயிற்றுதே? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே போனார். சிதம்பரநானிடம் இருந்து விடுபட்டால் போதும் என்று ஜிவி சந்தைக்குள் போனான். சிதம்பரநாதனும் அவரது கேள்விகளும் ஜிவியைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. தனது ஒலிபரப்புக் கூடத்திற்குள் சென்று ஜிவி கதவை மூடிய பிறகே அந்தக் காட்சியும் நின்றது.

கடையில் கூட்டம் கலைந்திருந்தது. சிதம்பரநாதன் கை வழக்கம் போல் நீண்டது. அவரது நீட்டிய கையில் அண்ணன் ஐம்பது சதத்தை வைத்தார். காசை எடுத்து காதில் செருகிக் கொண்டு கடையை விட்டு சிதம்பரநாதன் வழக்கம் போல் ஒன்றும் சொல்லாமல் போனார்.

அண்ணன் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தத்தை எதற்காக நான் இங்கு எழுத வேண்டும்?

மூனா
6.11.2015

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை