வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்

வேலை முடிந்தவுடன் என்னிடம் நடை பாதி ஓட்டம் பாதி கலந்து இருக்கும். ரெயினைப் பிடிக்க வேண்டும் என்பதால்தான் அந்த அவசரம். அந்த ரெயினை தவற விட்டால் ஒரு மணித்தியாலம் வரையில் அடுத்த ரெயினுக்காகக் காத்து நிற்க வேண்டும்.

அன்றும் வேலை முடிந்து ராஜ வீதியில் ஊர்ந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்குள் புகுந்து ரெயினைப் பிடிக்க வேகமாகப் போய்க் கொண்டிருந்த என்னை இராசையாவின் குரல் நிறுத்தி விட்டது.

இராசையா, நகரின் பிரதான சீட்டுப் பிடிப்பாளர். வட்டிக்காக பெருமளவு பணத்தை நகர் எங்கும் உலாவ விட்டிருப்பவர். கை விரல்களின் மொளிவரை நீண்ட அகன்ற மோதிரங்கள், சுண்டு விரல் அளவுக்கு கழுத்தில் தடித்த சங்கிலி என்று தகதக என எப்பொழுதும் மின்னிக் கொண்டே இருப்பார். „என்ரை மனுசிக்கு ஐம்பத்தியொரு பவுணிலை தாலி செய்து போட்டவன் நான்' என்று சந்தர்ப்பம் கிடைத்தால் தன் பெருமையை எடுத்து விடுபவர். அவர்தான் இப்பொழுது எனது வேகத்துக்குத் தடை போட்டவர்.

„என்ன அவசரமாப் போறீங்கள் போல இருக்கு?' அவரது கேள்வி அர்த்தமற்றதுதான். நான் அவசரமாகப் போவது கண்கூடு.

அவரது கேள்விக்குப் பதில் சொன்னேன். „ரெயினைப் பிடிக்க வேணும்'

பதில் சொல்லி விட்டு உடனேயே நகர்ந்திருக்கலாம். ஆனாலும் மரியாதையின் நிமித்தம், „எப்படி இருக்கிறீங்கள்?' என்று கேட்டேன்.

சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர். விடுவரா? உடனேயே தனது நாயனத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

„என்னத்தை அண்ணை சொல்லுறது? சுத்து மாத்துக்காரங்கள் சுத்திவர இருந்தால் எப்பிடி நல்லா இருக்கிறது?'

நேரத்தைப் பார்த்தேன் ரெயினுக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு ஐந்து நிமிடத்தை அவருக்கு ஒதுக்க மனது ஒத்துக் கொண்டது.

„ஏன் வேலையிலை ஏதும் பிரச்சினையோ?'; வேலைப் பிரச்சினை ஐரோப்பாவில எல்லோருக்கும் பொதுவானது என்பதால்தான் அவரிடம் அப்படிக் கேட்டேன்.

„வேலையிலை ஒரு பிரச்சினையும் இல்லை. யேர்மன்காரரோடைதானே வேலை. எந்தக் கரைச்சலும் இல்லை. எங்கடை தமிழ்ச் சனம்தான்...'

நீண்ட காலங்களாக தமிழனை தமிழன் ஏளனமாகப் பாடும் அதே பல்லவி. இராசையாவின் வார்த்தை இழுப்பில் மீண்டும் கேட்க வேண்டி இருந்தது.

அவர் தனது கொடுக்கல் வாங்கலில் பிய்க்கல் பிடுங்கல் பற்றிப் பேச ஆரம்பிக்கப் போகிறார் என்பது விளங்கியது. இராசையாவின் கச்சேரி நீண்டால் ரெயினைப் பிடிக்க முடியாமல் போய்விடும். எனவே எச்சரிக்கை தந்து அவரிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.

„ரெயினுக்கு இன்னும் எட்டு நிமிசம்தான் இருக்கு. என்ன பிரச்சினை? ஆக்கள் சீட்டை ஒழுங்கா கட்டுறாங்களில்லையோ?'

„சீட்டுக்கும் நேரத்துக்குக் காசு தர மாட்டாங்கள். இப்பவும் சீட்டுக் காசு வேண்டிறதுக்காகத்தான் ஒருத்தரைப் பாத்துக் கொண்டு இஞ்சை நிக்கிறன்'

எள்ளு எண்ணைக்காக காய்ந்து கொண்டிருக்க எலிப் புளுக்கையாக நான் வந்து மாட்டிக் கொண்டேன்.

„காசு வேண்டக்கை நாலு மாசத்திலை ஐஞ்சு மாசத்திலை தருவன் எண்டுவாங்கள். ஐஞ்சு மாசத்துக்குப் பிறகு ஆளைக் காணக் கிடைக்காது. ஓடி ஒழிச்சிடுவாங்கள். கலியாணம் காட்சிகளுக்கும் வரமாட்டாங்கள். ஆளைத் தேடிப் போனால்தான் அதுவும் எசகு பிசகா ஆள் மாட்டினால்தான் வட்டியாவது வேண்டலாம். வட்டிக்கு வேண்டிப் போட்டு கன பேர் காசை அடிச்சுக் கொண்டு போட்டாங்களண்ணை. போதாததுக்கு சீட்டையும் போட்டுட்டு அதையும் இடையிலை எடுத்துக் கொண்டு பிரான்ஸ் லண்டன் எண்டு குடும்பத்தோடையே மாறிட்டாங்கள். இப்ப நான் என்ரை கையாலை காசு கட்டிக் கொண்டிருக்கிறன்'

வரி கட்டாத, சட்டத்துக்கு வெளியில் நின்று செய்யும் தொழில். இரண்டு பக்கமும் ஏமாற்ற வாய்ப்புகள் உள்ள பணம் புரளும் தொழில். எந்தப் பக்கத்திலும் சிக்கல் வந்தாலும் போலிஸ், வழக்கு என்று போய் பணத்தை மீளாப் பெற முடியாத நிலை.

எனக்கு ரெயினுக்கான நேரம் குறுகிக் கொண்டிருந்தது. „இந்த வட்டி சீட்டு எல்லாத்தையும் விட்டிட்டு சேர்த்த பணத்தோடை சுகமா வாழப் பாக்கிறதுதானே?'

„இதைத்தான் எல்லாரும் சொல்லுயினம். ஒரு சீட்டு முடிஞ்ச உடனையே அடுத்த சீட்டு எப்ப எண்டுவாங்கள். விடேலாமல் இருக்கண்ணை' „பாத்து கவனமா நடவுங்கோ' ஒப்புக்குச் சொல்லி விட்டு அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

பொதுவாகவே யேர்மனியர்கள் அதிகம் வாசிப்பார்கள். நான் பயணிக்கும் ரெயினில் காலையும் சரி மாலையும் சரி அநேகமானவர்கள் மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் தராமல் அமைதியாக புத்தகமோ, பத்திரிகையோ ஏதாவது ஒன்றை வாசித்துக் கொண்டு வருவார்கள். சிலர் இசை கேட்டுக் கொண்டிருப்பார்கள். நானும் ஏதாவது வாசிப்பேன். கொஞ்சம் சோம்பலாக இருந்தால் இசை கேட்பேன். சில சமயங்களில் பலவற்றை அசை போடுவேன். இன்றைய பயணத்தின் போது இராசையாவின் சீட்டும் வட்டியும் எனது அசை போடலில் இருந்தது.

தவிச்ச முயல் அடிப்பது போன்று அதிகமான வட்டிக்குப் பணம் கொடுத்து சுரண்டுவது சரியா? தங்கள் தேவைக்கு பணத்தை வாங்கி விட்டு திரும்பத் தராமல் ஏய்ப்பது முறையா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்த பொழுது நினைவுக்கு வந்த கதைதான் நாங்கள் சிறு வயதில் படித்த காக்கா நரிக் கதை.

உளுந்து அரைத்து, அடுப்பு எரித்து, நெருப்பு வெக்கையில் கஸ்ரப் பட்டு வடை சுட்டது பாட்டி. அந்தப் பாட்டியிடம் இருந்து நேரம் பார்த்து வடையைத் தட்டிக் கொண்டு போனது காகம். காகத்திடம் நயமாகப் பேசி வடையை சுலபமாக அமுக்கிக் கொண்டது நரி. இதுதானே அந்தக் கதை.

உணவு விடுதிகளின் சமையல் கூடங்களில் நெருப்பில் வெந்தும், தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் வேகங்களுக்கு ஈடு கொடுத்து மாடாக உழைத்தும் இன்னும் பலவித வேலைகள் செய்தும் சம்பாதித்தும் தேவையான பண இலக்கை அடைய முடியாத நண்பர்களை நினைத்துப் பார்த்தேன். அந்த நண்பர்கள் வடை சுட்ட பாட்டியின் பாத்திரத்துக்கு ஒத்து வந்தார்கள். மற்றவர்களின் பணத் தேவையின் சந்தர்ப்பங்களை அறிந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்பவரை காகத்துக்கு ஒப்பீடு செய்தேன். நயமாகப் பேசி நட்பு வட்டத்துக்குள் வந்து நம்ப வைத்து, வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களிடம் தந்திரமாக பணத்தை அபகரிப்பவர்களை நரிக்கு ஈடாகப் பார்த்தேன். என்னளவில் அச்சொட்டாக எல்லா பாத்திரங்களும் பொருந்தி வந்தன. ஆக மொத்தத்தில் பஞ்ச தந்திரக் கதை ஒன்று வெளிநாடுகளில் எங்களுக்குள் நடந்து கொண்டிருப்பது புரிந்தது.

நீண்ட நாட்களாக நீங்கள் இந்தக் காக்கா நரிக் கதையை மறந்திருந்தால், அம்மா எங்கே திரைப் படத்தில் வேதா இசையில் வாலி எழுதி ஏ.எல்ராகவன் பாடிய „பாப்பா பாப்பா கதை கேளு' என்ற இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=JUcWKyUuaO4


- மூனா
24.12.2015


Drucken   E-Mail

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை