இம்சை அரசி கல்பனா அக்கா

சமூக வலையத் தளங்களில் தேவையான விடயங்களை தேடி எடுத்து வாசிப்பேன். மற்றும்படி முகநூலில் நான் நுனிப்புல் மேய்பவன். மறந்தும் யாருக்கும் கருத்துக்களை வைக்க நான் முயல்வதில்லை. நான் வைக்கும் கருத்துக்கள் பிடிக்காவிட்டால், ஏசிப் பேசி நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விடுவார்கள் என்ற பயம்தான்.

எழுதும் விடயங்களுக்கு கருத்துக்கள் வந்து அதில் உண்மை இருந்தால் அதை ஏற்றுக் கொண்டு எழுதியதை திருத்திக் கொள்ளலாம். அல்லது வந்த கருத்தில் தவறு இருந்தால் சொல்லிக் காட்டலாம். நேரம் இல்லாவிட்டால் பேசாமலே இருந்து விடலாம். ஆனால் எங்களிடம்தான் பொறுமை இல்லையே. நாங்கள் எழுதியதில் யாரேனும் தவறு சொன்னால் எளிதில் கோபம் கொள்ளும் சுபாவம் எங்களுக்கு. அந்தப் பிரச்சினையால்தான் முகநூலில் நான் ஏதும் எழுதாமல் சத்தம் சந்தடி இல்லாமல் ஒரு தடவை வந்து பாத்துவிட்டுப் போவேன்.

மற்றவர்கள் ஏதேனும் சொல்லி விடுவார்களோ, எள்ளி நகையாடுவார்களோ என்ற பயம் எங்களிடம் நிறைந்து இருக்கிறது. அந்த ஒரு குறையால் பலர் தங்களிடம் இருக்கும் திறமைகளை வெளியே காட்டுவதில்லை. ஒரு சிலரே தங்கள் திறமைகளுடன் வெளியே எட்டிப் பார்க்கிறார்கள். அப்படி வருபவர்களுக்கும், எங்களிடம் இருந்து வரவேற்பு கிடைப்பது அபூர்வம். எனக்குத் தெரிந்த ஒருவர், அவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். பெயர் கல்பனா பாலேஸ்வரன். முகநூலில் பிரபல்யம். அவர் பிரபல்யம் அடைந்ததற்கு ஒரேயொரு காரணம் அவரது பாடல்கள்தான். இராகங்கள், தாளங்கள் எல்லாவற்றையும் எங்கேயோ தொலைத்து விட்ட மாதிரி தன் விருப்பத்துக்கு பாடல்கள் பாடி, அதை செல்பி எடுத்து முகநூலில் கல்பனா பாலேஸ்வரன் பதிவேற்றி விடுவார். அவர் பாடும் பாணி, அந்தப் பாடலுக்கான நடனம் அல்லது முகபாவம், அடிக்கடி மாறும் உடை அலங்காரங்கள், குறிப்பாக அவரது குரல் இவை எல்லாம் பலரை அவரது நட்பு வட்டத்துக்குள் இழுத்து வைத்திருக்கிறது. அதனால் அவருக்கு ஏகப்பட்ட இரசிகர்கள். எந்தவிதமான விமர்சனங்களும் அவரை இடை நிறுத்தவில்லை என்பது ஆச்சரியம்தான். ஒரு விதத்தில் இது அவரது தன்னம்பிக்கை என்று சொல்லலாம்.

முகநூலில் அவர் பாடிப் பதிந்த பாடல்கள் youtube இலும் தரவேற்றப் பட அவரை பரவலாகப் பலருக்குத் தெரிந்து போயிற்று. அவரின் பாடலுக்கு எதிர் கருத்துக்கள் வந்தாலும் அவர் அதை பொருட்படுத்தாமல் பாடிக் கொண்டே இருந்தார். நாளாக நாளாக அவரது பாடல் தொல்லைகளை பலர் இரசிக்க ஆரம்பித்தார்கள். பல நாடுகளில் அவருக்கு இரசிகர்கள் உருவாகி விட்டார்கள். இரசிகர்கள் இப்பொழுது அவரை பாசத்துடன் „கல்பனா அக்கா' என்றே அழைக்க ஆரம்பித்தார்கள்.

„யக்கா யக்கா எங்க கல்பனா அக்கா
உங்க பாட்டைக் கேட்டு நாங்க தூங்கலையக்கா
என்னமா பாடுறீங்க தன்னாலை பேசுறீங்க
தாளத்தை சுருதியோடு சேத்து வைச்சு தாக்கிறீங்க
மற்றவங்களை சிரிக்க வைச்ச மல்கோவா மாமி நீங்க'

என்று வாழ்த்திப் பாடி youtube இல் ஒரு இரசிகை தரவேற்றி இருக்கிறார். இது தவிர தமிழ் சினிமா படத்தில் இருந்து சில காட்சிகளை கல்பனா பாலேஸ்வரன் பாடிய பாடல்களுடன் இணைத்தும் அவரது இரசிகர்கள் youtube இல் பதிந்திருக்கிறார்கள்.

இந்த வருடப் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கதகளி திரைப்படத்தில் கல்பனா அக்காவை வைத்தே கருணாஸ் நகைச்சுவைப் பகுதியை செய்திருக்கிறார். 'மாப்பிளை கவிதாக்கா பிறந்தநாளை முன்னிட்டு புது அல்பம் லோஞ் பண்ணியிருக்காங்க. மூஞ்சி எல்லாம் முலாம் பூசி இருக்காங்க பாக்கிறியா?' என்று கருணாஸ் விஷாலைக் கேட்கும் பொழுதே எனக்குப் புரிந்து விட்டது, அந்த நகைச்சுவை கல்பனா அக்காவை வைத்துத்தான் என்று. கல்பனா அக்காவின் பாத்திரத்தில் கருணாஸின் மனைவி கிரேஸ் நடித்திருந்தார். படத்தில் கருணாஸ் கல்பனா அக்காவின் இரசிகராக வருகிறார். கல்பனா அக்காவின் பெயர் மட்டும் படத்தில் கவிதாக்கா என்று வருகிறது.

கல்பனா அக்காவை கிண்டலடித்தும், வாழ்த்தியும் ஏகப்பட்ட வீடியோ துண்டுகள் youtube இல் கொட்டிக் கிடக்கின்றன.

கல்பனா அக்காவின் ஏகப்பட்ட பாடல்களில் மூன்றை மட்டும் இங்கே இணைக்கிறேன். பார்க்க விரும்பினால் மட்டும் பாருங்கள். பார்த்து விட்டு என் பக்கத்தில் வந்து தயவு செய்து கருத்துக்கள் மட்டும் எழுதி விடாதீர்கள்.

kalpana akka singing kanden kanden kathalai
kalpana akka padariyen padipariyen song
kalapana akka mothers day song

- மூனா
16.01.2016

Related Articles

காதலினால் அல்ல

சுமை தாளாத சோகங்கள்!

கரண்டி

ஒரு சனிக்கிழமை