இதிலே இருக்குது முன்னேற்றம்

அவரவர் தலையிடி அவரவர்களுக்கு என்பார்கள்.

சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இணையத்தில் இப்படி அழுதிருந்தார்.

„தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குத் திரைப்படமும், அரசியல் பிரிவினைகளும் இதற்கென்று ஜிங்ஜாங் அடிக்க ஒரு பெரிய கூட்டமும் இருக்க கடைசி வரைக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மயக்கத்திலே இருந்தே செத்து விட வேண்டியதுதான்'

அவரின் ஆதங்கம் புரிகிறது. அந்த ஆதங்கத்தில்  நாங்களும் அல்லவா இப்பொழுது இணைந்து விட்டோம்.

முன்பு தமிழ்நாட்டில் தங்களது அபிமான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நாளன்று இரசிகர்கள் கொடிகள் கட்டி, தோரணங்கள் தொங்க விட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். பின்னர் கற்பூரம் காட்டி ஆராதனை செய்து, பூச் சொரிந்து நடிகர்களை கடவுள்களாக்கினார்கள். பிறகு பாலாபிசேகம், பியர் அபிசேகம் என ரசிகர்களின் வளர்ச்சி இன்று பலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது இந்த வளர்ச்சி யாழ்ப்பாணம் மட்டும் வந்ததுதான் வேதனையை அதிகரித்திருக்கிறது. நடிகைகளுக்கு கோயில் கட்ட ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயமும் கூடவே சேர்ந்திருக்கிறது.

தேவை ஒரு சினிமா பாணி என்ற எனது கட்டுரைக்கு எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியும், சுரதா யாழ்வாணனும் தங்களுடைய கருத்துக்களை வைத்திருந்தார்கள். அவர்களது கருத்துக்களை மேலோட்டமாகப் பார்த்தால், பாலு மகேந்திரா அவர்கள் தன்னால் முடிந்தளவு ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார் என்ற அடிப்படையில் இருந்தன. அவர்களது அந்த எண்ணங்களில் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கவில்லை. ஈழத்து சினிமாவிற்கு பாலு மகேந்திராவின் பங்கு இருக்கவில்லை என்பதையே நான் எனது கட்டுரையில் சொல்ல வந்தேன்.

தம்பிஐயா தேவதாஸ் இலங்கை சினிமா பற்றி அதிகம் தெரிந்தவர். அவர் இலங்கை சினிமா சம்பந்தமாக, இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை, பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா, இலங்கைத் திரையுலக முன்னோடிகள், இலங்கை திரை உலக சாதனையாளர்கள், குத்துவிளக்கு - மீள்வாசிப்பு, இலங்கை திரை இசையின் கதை என ஆறு புத்தகங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

தம்பிஐயா தேவதாஸின் இலங்கைத் திரையுலக முன்னோடிகள் என்ற புத்தகத்தின் அணிந்துரையில் பாலு மகேந்திரா இப்படிக் குறிப்பிடுகிறார்.

„...தங்கள் மக்களையும் அவர் தம் வாழ்க்கையையும் பிரதி பலிக்கும் தமிழ்ப் படங்களைத் தயாரிக்காமல், இந்தியத் தமிழர்களையும் அவர்களது வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகப் பாவனை பண்ணிய – தங்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லாத - இந்திய தமிழ்ப் படங்களை அமோகமாக ஆதரித்த இலங்கைத் தமிழர்கள் இதற்கு இன்னுமொரு காரணம்.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில்  நமக்கென்ற - நம்முடைய ஒரு சினிமாவை இலங்கைத் தமிழர்களாகிய நாம் உருவாக்கத் தவறிவிட்டோம் என்ற உண்மை புலப்படும். தொழில் நுட்பம், கலா நேர்த்தி, உருவ உள்ளடக்க உன்னதங்களோடான – சர்வதேச சினிமாவோடு ஒப்பிடத்தக்க – ஒரு தமிழ்ப் படம் கூட இன்றுவரை இலங்கையில் உருவாக்கப் படவில்லை என்பது துரதிஸ்டம்.

இந்த நிலைக்கு ஏதோ ஒரு வகையில் நானும் ஒரு காரணகர்த்தா என்பதைக் குற்ற உணர்வோடு ஒத்துக் கொள்கிறேன்.....'

மேலும் தம்பியா தேவதாஸின் இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதைக்கான அணிந்துரையில் பாலு மகேந்திரா இப்படிக் குறிப்பிடுகிறார்.

„இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதைய சூழ்நிலையின் ஊடாக உலதரம் வாய்ந்த பல அசாத்தியமான படங்களைத் தரமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இது வெறும் உணர்ச்சி வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மனசு வைத்தால், ஈழத்து இளைய தலைமுறையின் வீரிய வீச்சு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும். இது சத்தியம்'

தம்பியா தேவதாஸின் இலங்கைத் தமிழ்ச்சினிமாவின் கதை நூலகத்தில் இருக்கிறது கீழே அதன் இணைப்பு இருக்கிறது.

இலங்கைத் தமிழ்ச்சினிமாவின் கதை

எனது நண்பர் ஒருவர் கட்டுரையொன்றின் இணைப்பை எனக்கு அனுப்பி இருந்தார். அந்தக் கட்டுரை  ஈழத் தமிழருக்கு என்று ஒரு சினிமா தேவை இல்லை என்பதைச் சொல்லி நிற்கின்றது. அந்தக் கட்டுரையையும் `நண்பர்` ஒருவரே எழுதி இருந்தார். ஏன் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்றால் கட்டுரையாளர் „நண்பர்களே“ என்று கட்டுரை வாசிப்பவர்களை விளித்திருந்தார். ஆகவே அதனால் நானும் கட்டுரையாளருக்கு நண்பனாகி விட்டேன்.

எனது முதல் கட்டுரையில் ஆங்கிலேயர்கள் வியாபார உத்திக்கு தேயிலையை எவ்வாறு அறிமுகப் படுத்தினார்கள்
என்று எழுதி இருந்தேன். அது  சினிமாவுக்கு இணையான வியாபாரம் என்று நான் சொல்வதாக நண்பர் எடுத்துக் கொண்டு விட்டாரோ என்று அவரது கட்டுரையை நான் வாசித்த பின்  அச்சம் கொள்கிறேன்.

ஆனாலும் இப்படிச் சொல்லலாம்.

கல்வி அறிவு இல்லாமல் தங்களின் உழைப்பு ஒன்றினால் மட்டுமே கரடு முரடான பாறைகளையும், மலையின் கற்களையும் நீக்கி சமதளமாக்கி தோட்டமாக உருவாக்கிய தொழிலாளர்களின் மகா சாதனை அது.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத எட்டுக்கு பத்து என்ற லயன் வீடுகளில் வாழ்ந்து கொண்டு இலங்கை பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்த தொழிலாளர்களின் அவல வாழ்க்கை அது.

இயந்திரம் பூட்டிய படகுகள் இல்லாத அன்றைய காலத்தில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வந்து, பல மைல்கள், பல நாட்கள் நடந்து போய் மலையகத்தை பசுமை பூமியாக மாற்றியவர்களின் உழைப்பு அது.

இப்படி அன்று சென்றவர்களில் 90,000 பேர்  ஆறு வருடங்களுக்குள் இறந்து போக,  எஞ்சியவர்கள் மட்டும் வாழாமால் வாழ்ந்து எங்களுக்குத் தேனீர் தந்த கதை அது.

அவர்கள் தந்த தேனீருக்குப் பின்னால் ஆயிரமாயிரமான கதைகள் இருக்கின்றன. நாங்கள் இலகுவாக இரசித்துக் குடிக்கும் தேனீர் என்பது சுலபமாக வந்ததொன்றல்ல. அவர்களோடு ஒப்பிடும் போது சினிமா எடுப்பது என்பது மிக மிகச் சுலபமானது.

கடந்து வந்த சினிமா என்ற மூனாவின் கட்டுரை ஒன்று தொடராக மகா.பிரபாவின் தமிழ் பிலிம் கிளப் இணையத்தில் முன்னர் வந்து கொண்டிருந்தது. அவரின் இணையத்துக்கான  இணைப்பு இப்பொழுது கிடைக்கவில்லை. ஆனாலும் இந்தப் பத்திக்கு தேவைப்படும் தகவல்களுக்காக, மனஓசை என்ற இணையத்தில் இருக்கும் அதன் ஒரு பகுதியை மட்டும் கீழே இணைக்கிறேன்.

கடந்து வந்த நமது சினிமா

ஈழத்தில் தமிழ் சினிமா வளராமல் பார்த்துக் கொண்டவர்கள் யாரென்று பார்த்தால், இந்தியாவில் இருந்து தமிழ்ப் படங்களை இறக்குமதி செய்து பணம் பார்த்த மூன்று நான்கு முதலைகள் மூல காரணம் என்பது தெரியவரும். இதை பாலு மகேந்திராவும் சொல்லியிருக்கிறார்.

அன்று இலங்கையில் தமிழ்ப் படங்கள் முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கையில், இலங்கை தமிழ் சினிமாவை இல்லாது ஒழிப்பதற்காக இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்று பெரும் நடிகர்கள், தயாரிப்பாளர்களைக் கொண்டு பெரும் முயற்சி கொண்டு வெற்றி கண்டார்கள். அந்தக் கூட்டுத் தயாரிப்பில் வி.சி. குகநாதனும் ஈடுபட்டது மிக வியப்பானது.

இவற்றை எல்லாம் உள்ளடக்கி இலங்கை சினிமா சம்பந்தப் பட்ட எவ்வளவோ விடயங்களை தம்பிஐயா தேவதாஸ் புத்தகங்களாகத் தந்திருக்கின்றார். அவற்றை எல்லாம் வாசித்தால், ஏன் எங்களால் ஈழத்து சினிமாவில் ஆழமாகக் கால் ஊன்ற முடியாமல் போனது என்பது புலனாகும்.

„உடும்பு போல உறுதி வேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்“


இந்த வரிகள் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்திற்குச் சொந்தமானது. ஏற்றம் செய்யும் பொழுது விவசாயிகள் பாடும் இந்தப் பாடலில் விவசாயத்தையும்  மீறி பல நல்ல கருத்துகள் இருக்கின்றன.அரசிளங்குமரி என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது. ஜி.இராமநாதன் இசை அமைத்திருந்தார். சீர்காலி கோவிந்தராஜன், ரி.எம்.சௌந்தரராஜன் இணைந்து பாடும் „ஏற்றமுன்னா ஏற்றம் அதிலே இருக்கு முன்னேற்றம்...' என்ற அந்தப் பாடலை பொருத்தம் கருதி இங்கே இணைக்கிறேன்.

ஏற்றமுன்னா ஏற்றம் அதிலே இருக்கு முன்னேற்றம்...

ஆழ்வாப்பிள்ளை
27.09.2014

Related Articles